கல்வி நிதி ஒதுக்காதது ஏன்? தமிழக அரசுடன் கொள்கை பிரச்னை: ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்
தென்காசி: தென்காசி அருகே மத்தளம் பாறை ஜோஹோ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு நேற்று வந்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், தேசிய கல்விக் கொள்கை புதிய வகையான கல்வி திறன் அடிப்படையிலான கல்வி, செயல்திறன் அடிப்படையிலான கல்வி. மற்றும் திறமை அடிப்படையிலான கல்வியை பரிந்துரைக்கிறது.
இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.2047க்குள் இந்தியா ஒரு மேம்பட்ட தேசமாக உருவாகுவதற்காக நாம் புதிய மாதிரியை உருவாக்க வேண்டும் என்றார். கல்வி நிதி ஒதுக்குதல் தொடர்பான கேள்விக்கு, ஒன்றிய அரசு பல்வேறு மாநில அரசுகளுடன் மிகவும் ஒத்துழைப்பாக செயல்படுகிறது. அது தமிழ்நாடு ஆனாலும் அல்லது வேறு எந்த மாநில அரசாக இருந்தாலும் அரசியலமைப்பின் விதிகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும்.
கொள்கைகளின் அடிப்படையில் முன்னேற வேண்டும். தமிழ்நாடு சில துறைகளில் எங்களுடன் இணைந்து செயல்படுகிறது. சில கொள்கை அமல்படுத்தல் பகுதிகளில், அவர்களுக்கு சில பிரச்னைகள் உள்ளன. எனினும், ஒன்றிய அரசின் நோக்கம் மாணவர்களின் நலனுக்கானது என்று பதில் அளித்தார்.