ஒரு சமூகம் முன்னேற கல்விதான் அடிப்படை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு கல்விதான் அடிப்படை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் சமமாக வாழுகின்ற சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதுதான் நம்முடைய லட்சியம். 2021 முதல் 2025 வரைக்கும் ஆதிதிராவிடர் துணை திட்டத்திற்கு 87 ஆயிரத்து 664 கோடி ரூபாயும், பழங்குடியினர் துணை திட்டத்திற்கு 8 ஆயிரத்து 78 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கியிருக்கிறோம். ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு கல்விதான் அடிப்படை. அதனால்தான், பல்வேறு திட்டங்கள் மூலமாக, கல்வியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருக்கிறோம். தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது மட்டுமல்ல, ஐ.ஐ.டி - என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில், கடந்த 2024-25 கல்வியாண்டில், 16 மாணவர்கள் மட்டுமே சேர்ந்த நிலை மாறி, இந்த 2025-26 கல்வியாண்டில், 135 மாணவர்கள் முன்னணி கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதிகளில் தங்கி படிக்கின்ற மாணவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க, 36 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 77 கற்றல் மற்றும் கற்பித்தல் அறைகளை கட்டியிருக்கிறோம். அடுத்து, நம்முடைய அரசு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்களில் முத்தாய்ப்பான திட்டமாக நான் நினைப்பது, ‘அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்’ உலகளவில் இருக்கின்ற டாப் யூனிவர்சிட்டியில் நம்முடைய பிள்ளைகள் படிக்க, அவர்களின் குடும்ப வருமான வரம்பை 12 லட்சம் ரூபாயாகவும், உதவித்தொகையை 36 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
இந்த திட்டத்தின் வெற்றியை நீங்கள் எல்லோரிடமும் கொண்டு செல்லவேண்டும். 2003ல் இருந்து, 2021 வரைக்கும், இந்த திட்டத்தில் பயனடைந்த மாணவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஆறு பேர், ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகளால், கடந்த ஐந்து ஆண்டுகளில் 385 மாணவர்கள் - ஆக்ஸ்போர்ட் - எடின்பரோ உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாணவர்களுக்காக 162 கோடியே 54 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, அடுத்ததாக, இன்னும் 42 மாணவர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் உயர்கல்வி படிக்கப் போகிறார்கள். அடுத்த முக்கியமான திட்டம், தொல்குடி புத்தாய்வு திட்டம், பழங்குடியினர் தொடர்பான பாடங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்க, நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இது. இந்த திட்டத்தில், தமிழ்நாட்டு பழங்குடியினர் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் என்று ஆறு மாதங்களுக்கும், முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வு அறிஞர்களுக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் என்று மூன்று ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்குகிறோம்.
அடுத்து, சட்டப்படிப்பை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்காக சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி உதவித்தொகை திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த திட்டத்தில், பத்தாயிரம் ரூபாயை மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குகிறோம். கடந்த இரண்டு நிதியாண்டுகளில், ஆயிரத்து 593 மாணவர்களுக்கு ஒரு கோடியே 67 லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கியிருக்கிறோம்.
பழங்குடியின செவிலியர் மாணவர்களுக்கான உதவித்திட்டம் மூலமாக 184 பழங்குடியின பெண் மாணவிகளின் செவிலியர் பட்டயப்படிப்பிற்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் என்று மூன்று ஆண்டுகளுக்கு வழங்குகிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் அவரது இலக்கை அடைய திராவிட மாடல் அரசும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் என்றும் துணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
* ரூ.265.50 கோடியில் நலத்திட்ட உதவிகள்
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.74.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர்களுக்கான 2 சமூகநீதி விடுதி கட்டிடங்கள், 21 பள்ளிகளுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 25 கிராம அறிவுசார் மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், 10 கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்கத்திற்கான கிராம ஊராட்சி விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட மானியம் என மொத்தம் ரூ.265.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 9371 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.