கல்வி உதவித்தொகை கல்வி இடைநிற்றலைத் தவிர்க்கும் - கல்வியாளர் கிரேஸி
கல்விக் கட்டணங்களைச் செலுத்த இயலாத ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தனது அமைப்பின் மூலமாக கல்வி கட்டணங்களை செலுத்தி உதவி வருகிறார். மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் மற்றும் பாடப் பிரிவுகளில் சேர தேவையான ஆலோசனைகளை வழங்கியும் வருகிறார். மேற்படிப்பு பயிலும் ஏழை மாணவ செல்வங்களுக்கு தங்களது எதிர்காலத்தினை வடிவமைத்துக் கொள்ள தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வரும் கிரேஸி பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மோட்டிவேஷ்னல் கருத்துக்களை மாணவ செல்வங்களிடையே பகிர்ந்து வருகிறார். தன்னுடைய கல்விப் பணி மற்றும் சேவைகள் குறித்து விளக்குகிறார் கல்வியாளர் முனைவர் கிரேஸி இமானுவேல்.
உதவி தேவைப்படும் மாணவ செல்வங்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதன் நடைமுறைகளை எளிதாக புரியும் வகையில் சொல்லித் தருவதன் மூலம் பல மாணவர்கள் பயன்பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்லூரி கட்டணம் செலுத்த இயலாத ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை வழங்கி உதவி வருவதோடு, எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் என்கிற ஆலோசனைகளை வழங்கி வருகின்றோம். கல்வி குறித்த கருத்தரங்கங்கள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள் என சுயமுன்னேற்ற பேச்சாளராகவும் மேடைகளில் விழிப்புணர்வு உண்டாக்க முயல்கிறோம்.
கல்வி இடை நிற்றல் குறித்து விளக்குங்கள்?
கிராமப்புற மாணவர்களுக்கு சில பிரச்னைகள் எனில் நகர்புற மாணவர்களுக்கு வேறு பல சிக்கல்கள். பொதுவாகவே கிராமப்புற மாணவர்களின் தலையாய பிரச்னை என்பது கல்வியில் இடைநிற்றல். எப்போதும் அது வறுமையின் காரணமாகவோ பொருளாதார பிரச்னைகளாலோ கல்வி இடை நிற்றல் நடைபெறும். தற்போதைய காலச் சூழலில் அரசுபள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை தான். இவர்களில் பலர் பள்ளி விடுமுறை நாட்களில் சிறுசிறு வேலைகளுக்கு சென்று பணம் ஈட்ட தொடங்கி விடுவார்கள். இதனால் கையில் பணம் புழங்க தொடங்கியதால் திரும்பவும் இவர்களை பள்ளிக்கு வரவழைப்பதில் கட்டாயம் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இதில் மாணவ பருவத்தில் புழங்கும் பணவசதிகளால் போதை பழக்கவழக்கங்கள் மற்றும் விலை உயர்ந்த எலக்ரானிக் பொருட்களின் உபயோகங்கள் என தடம் மாறி பயணிப்பதாக மாணவச் செல்வங்கள் மேல் பற்பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் உள்ளது. கிராமப்புற ஆண்பிள்ளைகளின் பிரச்னைகள் இப்படியாக இருக்க கிராமப்புற பெண் மாணவிகளின் பிரச்சினை வேறுமாதிரி திசைதிரும்புகிறது. குழந்தை திருமணம், படிப்பை பாதியில் நிறுத்தி இடையில் திருமணம் போன்ற பாதிப்புக்கள் வருவதாக செய்திகள் கவலையாக இருக்கும். கல்வி உதவித்தொகைகள் கிடைக்கும்போது மேற்படிப்பிற்கு போகும் கிராமப்புற மாணவிகளில் எண்ணிக்கை வருங்காலங்களில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பெற்றவர்களின் வருமான இழப்புக்களும், பொருளாதார பிரச்சனைகளும் இக்குழந்தைகளின் இடைநிற்றலை அதிகரிக்க செய்வதை தவிர்க்க செய்ய வேண்டும்.
இதனை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?
நிறைய விதமான கல்வி உதவித் தொகைகள் மற்றும் கல்வி சலுகைகள் அரசு திட்டங்களில் உள்ளது. ஆனால் யாருக்குமே அது குறித்த முழுமையான போதுமான விழிப்புணர்வு இருப்பதில்லை என்பது வருத்தமான உண்மை. இதற்காகவே நிறைய புள்ளி விவரங்களை சேகரித்து வைத்துள்ளோம். யாருக்கெல்லாம் கல்வி உதவித்தொகை கிடைக்கும். அதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்து தகவல்கள் தெரிந்து அதனை மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்துவதன் மூலம் பலரும் பயன்பெற முடிந்தது. நிறைய மாணவர்களின் இடை நிற்றலை தடுத்து கல்வியை மீண்டும் தொடர உதவியது . ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கல்விக்கான உதவித்தொகைகள் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
மத்திய அரசு கல்வி உதவித் தொகை மற்றும் மாநில அரசு கல்வி உதவித் தொகை இரண்டும் மாணவச் செல்வங்கள் பெறலாம். கல்வி கற்கும் முதலாம் தலைமுறை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டங்கள் உண்டு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வியில் 100 சதவீத சலுகைகள் இருக்கிறது. மெரிட் தகுதியில் 7.5 ஸ்கேலில் கல்வி உதவித் தொகை பெற இயலும். பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் கல்வி உதவித் தொகை கிடைக்கும். நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித் தொகை பெற முடியும் சிலருக்கு வறுமையான சூழலில் உதவித்தொகை பெற இயலாமல் இருக்கும் மாணவ மாணவியருக்கு எங்கள் அறக்கட்டளையின் மூலமாகவும் கல்வி உதவித் தொகையை தந்து உதவுகிறோம்.
உயர்நிலை பள்ளியில், 12ம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
சென்ட்ரல் யூனிவர்சிட்டி & ஸ்டேட் யுனிவர்சிட்டியில் எந்த துறையில் என்ன படிக்கலாம் அதற்கான தகுதி தேர்வுகள் என்னென்ன? என்ற தலைப்பில் ஒரு பயனுள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இதன் அடுத்த கட்ட நகர்வாக தமிழ்நாடு முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள் திறக்க இருக்கிறோம் என சமூக அக்கறையுடன் பேசுகிறார் கிரேஸி.
- தனுஜா ஜெயராமன்