கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி மாநாட்டில் தீர்மானம்
சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் எஸ்டிபிஐ கட்சியின் மாநில அளவிலான ‘தொகுதி நிர்வாகிகள் மாநாடு’ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நேற்று நடந்தது. மாநாட்டை, கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான இல்யாஸ் தும்பே தொடங்கி வைத்தார்.
அகில இந்திய செயலாளர் அப்துல் சத்தார், தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது பாரூக் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக், ஏ.கே. கரீம் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸ்ருத்தீன், மாநில செயலாளர்கள் ஹமீது ஃப்ரோஜ், பாஸ்டர் மார்க், நஜ்மா பேகம், ஹஸ்ஸான், பொருளாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் அஹமது நவவி வரவேற்புரையாற்றினார். துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக் ஆகியோர் துவக்க உரை ஆற்றினர். தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையுரையாற்றினார்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் வாழ்த்துரையாற்றினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தேர்தல் செயல்திட்டங்கள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் உத்திகளை வலுப்படுத்துவது, அடிமட்ட அமைப்பை மேம்படுத்துவது, பூத்கமிட்டி பொறுப்பாளர்களுக்கான திட்டமிடல்கள், மற்றும் கட்சியின் சமூகநீதி கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில செயலாளர் ஷபீக் அஹம்மது நன்றி கூறினார்.