தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா அமித்ஷா பேச்சுக்கு 1ம் தேதி எடப்பாடி பதில் அளிப்பார்: ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி
மதுரை: நெல்லை தச்சநல்லூரில் பாஜக தென்மண்டல பூத் பொறுப்பாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட உள்துறை அமித்ஷா தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவில்லை. இது முதல்முறை அல்ல. தமிழகம் வரும்போதெல்லாம் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி என்று சொல்கிறாரே தவிர, எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என தெரிவிப்பதில்லை. இது அதிமுக மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற செப்.1ம் தேதி முதல் 4ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தேர்தல் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக பாதுகாப்பு கேட்டு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கூட்டாக மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்திடம் இன்று மனு அளித்தனர்.
அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 1ம் தேதி முதல் 4ம் தேதி மதுரை மாவட்டத்தில் எழுச்சி பயணம் மேற்கொள்கிறார். அனைத்து தரப்பு மக்களும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராக உள்ளனர்’ என்றார். அப்போது நிருபர்கள், ‘நெல்லையில் பேசிய அமித்ஷா அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவில்லையே என கேட்டதற்கு, ஆர்பி உதயகுமார், ‘வரும் 1ம் தேதி எடப்பாடி பழனிசாமி மதுரை வருகிறார். அப்போது உங்கள் கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொல்வார் என தெரிவித்து சென்று விட்டார்.