எடப்பாடிக்கு 10 நாள் கெடு நாளை முடிகிறது; சென்னையில் நிர்மலா சீதாராமனுடன் இன்று மீண்டும் செங்கோட்டையன் சந்திப்பு
கோபி: எடப்பாடிக்கு விதித்த 10 நாட்கள் கெடு நாளையுடன் முடிய உள்ள நிலையில் செங்கோட்டையன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்னையில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தோல்வி அடைந்தது. இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் கண்டுகொள்ளாமல் தன்னிச்சையாக நிர்வாகிகள் நியமிப்பது, முடிவுகளை எடுப்பது என எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரிபோல செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் எம்ஜிஆர் கட்சி தொடங்கியதிலிருந்து இருக்கும் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை புறக்கணித்து அவருக்கு எதிரணியில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். இதனால் கொதித்துப்போன செங்கோட்டையன், எடப்பாடி நிகழ்ச்சிகளை புறக்கணித்ததோடு அவரது பெயரையே சொல்லாமலும் படத்தை போடாமலும் எதிர்ப்பு காட்டினார்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி அவர் மனம் திறந்து அளித்த பேட்டியில், ‘‘அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் எடப்பாடி ஒன்றிணைக்க வேண்டும், இல்லாவிட்டால் நாங்களே அதை செய்வோம்’’ என்று கெடு விதித்தார். அவரோடு மேலும் 3 முன்னாள் அமைச்சர்களும் களம் இறங்க தயாரான நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா உட்பட 13 பேரை பொறுப்புகளில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கினார்.
இதையடுத்து மறுநாளே ஹரித்துவாரில் ராமரை சந்திக்க போவதாக கூறி டெல்லி சென்ற செங்கோட்டையன், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து அதிமுகவில் நிலவும் பிரச்னை குறித்து விரிவாக எடுத்துக் கூறி அதிமுகவை ஒன்றிணைக்க கோரிக்கை வைத்தார். அதன் பின் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது, செங்கோட்டையனுடன் ஓபிஎஸ் போனில் பேசி ஆதரவு தெரிவித்தார். டிடிவி. தினகரனும் செங்கோட்டையனை சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழந்தியும் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனை சந்திந்தனர். இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், ‘‘வரும் 15ம் தேதிக்கு பிறகு நினைத்தது நடக்கும்...நல்லது நடக்கும்...’’ என்று தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் எடப்பாடிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு நாளை (15ம் தேதி)யுடன் நிறைவடைகிறது. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் பரபரப்பான சூழலில் இன்று சென்னை வரும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்காக செங்கோட்டையன் நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். கோவை சென்று விமானம் மூலம் சென்னை செல்லும் அவர் இன்று இரவு நிர்மலா சீதாராமனை சந்திக்க இருக்கிறார். ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்வதற்காக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவருடன் ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆலோசனையில் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
காலக்கெடு நிறைவடைந்ததும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாட்டில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் சிலரையும் இணைத்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து வந்த செங்கோட்டையன் மீண்டும் ஒருங்கிணைப்பு கோரிக்கைக்காக இரண்டாவது முறையாக நிர்மலா சீதாராமனை சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள்: செங்கோட்டையன்
கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், உறவினர் திருமணத்திற்காக சென்னை செல்கிறேன் எனக்கூறினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க நீங்கள் கொடுத்த கெடு இரண்டு நாட்களில் முடியப்போகிறதே என்ற கேள்விக்கு, ‘‘எல்லாம் நன்மைக்கே’’ என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘என்னை பொறுத்தவரை இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான். இதுதான் எனது ஆசை. இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘‘இல்லை. நான் உறவினர் திருமணத்திற்கு செல்கிறேன்’’ என பதிலளித்தார். மீண்டும் டெல்லி செல்வீர்களா என்ற கேள்விக்கு, ‘‘காலம் பதில் சொல்லும்’’ என்றார்.
எடப்பாடி தலைமை வேண்டாம்: தொண்டர்கள் முழக்கம்
திண்டுக்கல் மாவட்ட அமமுகவினர் நேற்று செங்கோட்டையனை அவரது வீட்டில் சந்தித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் எடப்பாடி தலைமை வேண்டாம், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், அதிமுகவில் டிடிவி தலைமை ஏற்க வேண்டும் என முழக்கமிட்டனர். இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட அமமுக செயலாளர் நல்லசாமி கூறுகையில், ‘‘அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நல்ல கோரிக்கைக்காக செங்கோட்டையன் போராடி வருகிறார். அவருக்காக நாங்கள் ஆதரவு தெரிவிப்பதற்காக வந்துள்ளோம். எடப்பாடி தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் செலவழித்து ஆட்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து கூட்டி வந்து கூட்டம் நடத்துகிறார்கள். பணம் கொடுத்து 3000, 4000 பேரை கூட்டி வருகிறார்கள். கூட்டத்தை அதிகரித்து காட்டுவதற்காக குறுகலான சாலைகளில் கூட்டம் நடத்துகின்றனர். எடப்பாடி பழனிசாமி மிகவும் வீக்காக இருக்கிறார். மீண்டும் அதிமுக ஒன்றிணையும்’’ என்றார்.
விரைவில் நல்ல செய்தி வரும்: மாஜி அமைச்சர் ஆருடம்
செங்கொட்டையனை அவரது இல்லத்தில், ஓபிஎஸ் அணி அதிமுக உரிமை மீட்பு குழுவை சேர்ந்த திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்ட கார்களில் அணிவகுத்து வந்து நேற்று சந்தித்து ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
பின்னர் மாஜி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல நிலைகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த நிலைக்கு அதிமுக ஒன்றிணையாததே காரணம்.அதிமுகவில் ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என எடப்பாடி கூறி உள்ளார். அதனால், அதிமுக பிளவுபட்டது. அதிமுக பிளவு பட்டதிலிருந்து தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதிமுக இணைந்தால் மட்டுமே அனைத்து நிலைகளிலும் மாபெரும் வெற்றி பெற முடியும் என அனைவரும் கூறி வருகிறோம். ஒற்றுமை இல்லாததால் கூட்டணிக்கு தேடி வருபவர்களும் வருவதில்லை. பல்வேறு நிலைமையை எடுத்துக் கூறியும் எடப்பாடி ஏற்கவில்லை. அதிமுகவிற்கு பெரிய விடிவு காலம் வரும் வகையில் செங்கோட்டையன் மனம் திறந்து பேசி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க வந்துள்ளோம். இன்னும் 15-20 நாளில் நல்ல ஒரு நிகழ்வு நடைபெறும் என செங்கோட்டையன் எங்களிடம் சொல்லியிருக்கிறார்.
ஒற்றைத் தலைமை என்று பதவி ஆசையும், தன்னை விட திறமையானவர்கள் வந்து விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும் அதிமுகவை ஒன்றிணைக்க மறுக்கிறார். பத்து நாள் கெடு முடிந்த பிறகு பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. விரைவில் நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.