எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி.தினகரன் பதில் துரோகம் அதன் வேலையை காட்டும்: ராயப்பேட்டைக்கு வெளியே கூட்டணிக்கு வரும்படி கூவிக்கூவி அழைக்கின்றனர்
சென்னை: சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். விஜய்யை கூட்டணிக்கு வா வா என்று கூவி பார்த்தார்கள். ஆனால் தெளிவாக அவருடைய நிலைப்பாட்டை அறிவித்த பிறகு சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற உச்சத்துக்கு சென்றுவிட்டார்கள். நான் உண்மை சொன்னால் வேப்பங்காய் தின்றது போல் தான் இருக்கும். உண்மை எப்போதும் கசக்கும், துரோகம் என்றும் அதன் வேலை காட்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த காலத்தில் அதிமுகவை நோக்கி தான் கூட்டணிக்கு வருவார்கள். ஆனால் தற்போது ராயப்பேட்டைக்கு வெளியில் ஸ்டிக்கர் விற்பது போல் கூவிக்கூவி கூட்டணிக்கு அழைக்கின்ற நிலைமையில் அந்த கட்சி உள்ளது. கொடநாடு எஸ்டேட்டில் நகைகளோ பணமோ பொருட்களோ இருக்காது என்பதை தெரிந்தும் அங்கே கொலை அதைத் தொடர்ந்து தற்கொலை, தொடர் கொள்ளைகள் நடந்து உள்ளது. இவை அனைத்தும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது நடந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் கொடநாடு கொலை வழக்கில் பல தடயங்கள் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது.
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது கட்சி நிர்வாகிகள் மீது வரும் குற்றசாட்டுகள் அது பச்சை கவரில் வரும். அதில் அமைச்சர்கள், ஒன்றிய செயலாளர்கள் செய்த லீலைகள் எல்லாம் இருக்கும். அது ஒன்றும் அரசு கோப்பு கிடையாது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் நகல் ஒன்று அரசாங்கத்திடம் நிச்சயம் இருக்கும். அது எந்த துறை இருந்தாலும் சரி. அதேபோன்று நாங்கள் ஒன்றும் கோப்புகளை பார்க்கவில்லை எதுவும் கிழிக்கவும் இல்லை.ஆனால் இதனை எடப்பாடி தரப்பினர் அரசு சாட்சியங்களை தினகரனை எப்படி பார்க்கலாம் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அங்கு நிறைய ஆவணங்கள் இருந்தது, அதனை சசிகலா சரி பார்க்க கூறினார். அப்போது சில ஆவணங்களில், சிலரைப் பற்றி வந்ததை நாங்கள் பார்த்தோம். அது எப்படி அரசு சார்ந்த ஆவணங்களை டிடிவி தினகரன் பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மிரட்டல் விடுகின்றனர். முடிந்தால் வழக்கு பதிவு செய்ய சொல்லுங்கள் என்னவென்று நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 2021ம் தேர்தலில் சிலர் திமுகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்கள். ஆனால் எனக்கும் தெரியும் பழனிசாமி இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார் என்று, ஏனென்றால் அவர் செய்த துரோகத்தால் என்னை சந்திக்க அவர் பயப்படுவார்.
ஓபிஎஸ் தவறை உணர்ந்து ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துவிட்டார். ஆனால் தவறு செய்து விட்டு, சுயநலத்தால், பதவி வெறியால் துரோகம் செய்தவர்கள் உணராமல் இருப்பதால் இதற்கு காரணம். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார், ஆனால் அவர் அன்று ஒரு வாரம் பொறுத்து இருந்தால் அவர் முதல்வர் ஆகி இருப்பார். என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியில் வந்த பிறகு யாரும் என்னிடம் பேசவில்லை. அண்ணாமலை மட்டும் நண்பராக பேசினார்.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் இல்லை, என்டிஏ அவர் தலைமையில் உள்ளது என்று கூட அமமுக ஏற்றுக்கொள்ளவில்லை. விஜய் கூட்டணிக்கு வரவில்லை என தெரிந்துவிட்டது, எனவே வருங்காலத்தில் திமுகவை விட அதிமுக விஜையை அதிகம் விமர்சனம் செய்வார்கள். வரும் தேர்தலுக்கான எங்கள் நிலைப்பாடு என்பது துரோகத்தை வீழ்த்துவது. அதனை நோக்கி அமமுக செயல்படுகிறது. இனி வருங்காலத்தில் துரோகம் செய்து யாரும் அரசியல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.