எடப்பாடி பழனிசாமி தலைமையில் 30ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: நடிகர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்துள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி தலைமையில் 30ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகிற 30ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பேசும்போது, அதிமுக கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஊழல் கட்சியோடு பாஜக கூட்டணி வைத்துள்ளது என்று கூறியுள்ளார். அதேபோன்று, உள்துறை செயலாளர் அமித்ஷாவும், அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நடைபெறும் என்று நேற்றும் நெல்லையில் கூறி உள்ளார். இதுபோன்ற குழப்பமாக நிலையில், வருகிற 30ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.