எடப்பாடி பழனிசாமி கொடுத்த அல்வாவால்தான் அதிமுக பல கோணங்களில் பயணித்து கொண்டிருக்கிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை: பெரம்பூர் நெடுஞ்சாலை ராஜிவ் காந்தி பூங்கா அருகில் ரூ.34.90 லட்சம் மதிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வாட்டார துணை ஆணையர் கவுஷிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி கொடுத்த அல்வாவால்தான் அந்த இயக்கம் பல கோணங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அவர் அல்வா கொடுத்தார் என்பதை உணர்ந்துதான் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அல்வாவும் ஒரு வகை உணவுதான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதலமைச்சர் பரிமாறுவார். ஆணவ கொலைக்கு எதிராக ஆணையம் அமைத்துள்ளது வெற்று அறிக்கை என்ற வானதி சீனிவாசனின் விமர்சனம் செய்கிறார். 2026ம் ஆண்டு தமிழக முதல்வர் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறார் என்பதால் வானதி சீனிவாசனுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
ஆணவக் கொலைகளுக்கு என தனியாக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அந்த ஆணையத்தின் இறுதி அறிக்கையைத்தான் செயல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். எந்த திட்டமாக இருந்தாலும் அதை திட்டமிட்டு நிறைவேற்றுகிறவர் தமிழக முதல்வர். தெருக்களின் பெயரில் இருக்கிற சாதிய அடையாளங்களை மாற்றுவது தொடர்பான வழக்கு வந்தபோது நீதிமன்றமே முதல்வரின் முயற்சியைப் பாராட்டி இருக்கிறது. பலதரப்பட்ட மக்களின் பாராட்டை பெரும் முதல்வர் வானதி சீனிவாசனின் பாராட்டை பற்றி கவலைப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.