எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டுவதால் அதிருப்தி; சசிகலா, ஓ.பி.எஸ்ஸை கட்சியில் சேர்க்கும்படி வலியுறுத்த முடிவு: செங்கோட்டையன் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள்
சென்னை: கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டுவதால், சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கலகத்தை கட்சிக்குள்ளேயே எழுப்ப செங்கோட்டையன் முடிவு செய்துள்ளதாகவும், அவர் கட்சியில் இருந்து வெளியேற மாட்டார் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ சமீப காலமாக கருத்து வேறுபாட்டில் இருந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார். பாஜவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி தயங்கியபோது, ‘‘கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
ஒன்றுபட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும்’’ என்று செங்கோட்டையன் பேசி வந்தார். தொடர்ந்து டெல்லியில் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக அதிமுக, பாஜ கூட்டணி அமைந்தது. அதன்பிறகு செங்கோட்டையன் மவுனம் காத்து வந்தார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாட்டில்தான் இருந்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்துக்கு வந்தபோதுகூட அவரை செங்கோட்டையன் வரவேற்கவில்லை. பிரசாரத்திலும் பங்கேற்கவில்லை. இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் செங்கோட்டையனுக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்தார். முற்றிலும் ஓரங்கட்டத் தொடங்கினார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பணனுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.
ஈரோடு மாவட்ட ஐடி விங் மாவட்ட நிர்வாகியாக மோகன்குமாரை நியமிக்கும்படி செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு எதிர் அணியைச் சேர்ந்த மகேஷ்ராஜாவை நியமித்து கட்சித் தலைமை உத்தரவிட்டது. இதனால் செங்கோட்டையன் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, வரும் 5ம் தேதி செங்கோட்டையன் மனம் திறக்கிறார் என்ற தகவல் பரவியது. நேற்று காலை குள்ளம்பாளையத்தில் உள்ள வீட்டை விட்டு கட்சி அலுவலகம் வந்த செங்கோட்டையன் நிருபர்களை சந்தித்தார். அப்போது ‘‘வரும் 5ம் தேதி மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று கூறிச் சென்றார். இதனால் செங்கோட்டையன் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. அதிமுகவில் இருந்து அவர் விலகப்போகிறார் என்றும், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒருங்கிணைக்கப்போகிறார் என்றும் பேச்சுகள் அடிப்பட்டன.
இது குறித்து நேற்று முன்தினம் மதுரை ஓட்டலில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி, ‘‘இந்த விவகாரம் குறித்து அன்று மாலையில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் பதில் அளிக்கிறேன்’’ என கூறியிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மதுரையில் 3 இடங்களில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் செங்கோட்டையன் குறித்து எந்த பதிலையும் கூறாமல் எடப்பாடி பழனிச்சாமி திடீரென மவுனம் ஆனார். அவர் செங்கோட்டையன் குறித்து பதில் அளிக்காமல் திடீரென பின்வாங்கியது ஏன்? அவரது மவுனத்துக்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கோபியில் நேற்று செங்கோட்டையனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது, ‘‘எடப்பாடி தரப்பில் இருந்து யாராவது பேசினார்களா?’’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன்,‘‘நாளை 5ம் தேதி காலை 9 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.
அந்த சந்திப்பு கட்சி அலுவலகத்தில் நடைபெறும். கட்சியில் இருந்து வேறு யாரையும் வர வேண்டாம் என கூறிவிட்டேன். அன்றைய தினம் என்னுடைய கருத்துக்களை நான் தெரிவிக்கிறேன். என்னுடைய கருத்தை பிரதிபலிக்கப்போகிறேன்’’ என்றார். இந்த நிலையில் இன்று காலை கோபி அருகே கலிங்கியத்தில் திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திட்டமிட்டபடி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு மனம் திறந்து பேச உள்ளேன்.’’என கூறினார். துரோகத்தை சுமந்து செல்பவர்களுடன் கூட்டணி கிடையாது என்பதால் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டதாக டிடிவி தினகரன் கூறியது குறித்து கேட்ட போது, ‘‘டிடிவி தினகரன் கூறிய கருத்துக்கு அவர் தான் பதில் கூற வேண்டும். அவரது கருத்துக்கு நான் பதில் கூறுவது பொருத்தமாக இருக்காது.
அதே போல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றதா?, உங்களிடம் யார் யாரெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்’’ என்று கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாளை காலை வரை பொறுத்திருங்கள் அப்போது பதில் கூறுகிறேன்’’ என்று கூறினார். ஆனால் கட்சியில் தன்னை ஓரங்கட்டுவதால், கட்சிக்குள் இருந்து கொண்டே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூற முடிவு செய்துள்ளாராம். அனைவரையும் கட்சிக்குள் சேர்த்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற குழப்பத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம். கட்சியில் எடப்பாடியை விட சீனியர் என்பதால், தன் மீது எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்பதால், இந்த திட்டத்தை கையில் எடுக்கிறாராம்.
தொடர்ந்து தேர்தல் வரை இதே பிரச்னையை கட்சியின் அனைத்து மட்டத்துக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளாராம். இதனால் நாளை கட்சிக்குள் இருந்து கொண்டே புரட்சி என்ற திட்டத்தைதான் கையில் எடுக்க இருக்கிறாராம். இவருக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தீவிர ஆதரவு கொடுத்து வருகிறாராம். இதனால், அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.