அதிமுக ஆட்சியில் கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?.. எடப்பாடி பழனிசாமியுடன் விவசாயி வாக்குவாதம்: பொள்ளாச்சியில் பரபரப்பு
கோவை: பொள்ளாச்சியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் எடப்பாடியுடன் விவசாயி ஒருவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று பொள்ளாச்சியில் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் உடன் கலந்துரையாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கிடவு தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது; கள் இறக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விவசாயி ஒருவர் கேள்வி கேட்டார். கள் விற்பனைக்கு அதிமுக ஆட்சியில் அனுமதி கொடுக்காதது ஏன்? என்று விவசாயி கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தபோதும் அதை ஏற்காமல் விவசாயி தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கேள்வி கேட்ட விவசாயியை பேச்சை முடித்துக் கொள்ளக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. விவசாயியை எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் சமாதானம் செய்ய முயன்றனர். சமரசத்தை ஏற்க மறுத்து விவசாயி தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.