எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தால் அதிமுகவுக்கு 5 நிமிடத்தில் விடிவு காலம் பிறக்கும்: புகழேந்தி பேட்டி
இதன்பின்னர், நிருபர்களிடம் பேசிய கே.சி.பழனிசாமி கூறியதாவது: நாங்கள் ஒரு சிலரை மட்டும் ஒருங்கிணைக்க அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கவில்லை. இதில், கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒருங்கிணைக்க இருக்கிறோம். அதேபோல், கிளைக் கழக அளவில் நிறைய நிர்வாகிகள் பிரிந்து இருக்கின்றனர்; அவர்களை ஒருங்கிணைத்து உள்ளாட்சி தேர்தலில் பெரிய வெற்றியை பெறுவோம். அதன்படி, முதலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச இருக்கிறோம்.
அதன் பிறகு மற்றவர்களை சந்திக்க உள்ளோம். மேலும், எங்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பழனிசாமிக்கும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கும் கடிதம் ஒன்றை கொடுக்க இருக்கிறோம். அந்தவகையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது: அதிமுகவை ஒருங்கிணைப்பது எடப்பாடி பழனிசாமி கைகளில்தான் உள்ளது.
எங்களது பழைய நண்பர் எடப்பாடி பழனிசாமி. எங்களைச் சந்திக்க அவர் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. டிடிவி தினகரன் கட்சியை விட்டு விட்டு அதிமுக வரவேண்டும் என்றால் வரட்டும். எங்களை பொறுத்தவரை பழனிசாமி முடிவெடுத்தால் ஐந்து நிமிடத்தில் அதிமுகவிற்கு விடிவு காலம் பிறக்கும். அதற்கு பழனிசாமி ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், ஒரு தேசிய கட்சி உள்ளே வந்துவிடும். திராவிட சிந்தாத்தம் கொண்ட திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தை தொடர்ந்து ஆள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.