புரையோடிய கால்களை எடப்பாடி வெட்டி உள்ளார் ஓபிஎஸ், செங்கோட்டையன் டிடிவி.தினகரன் தறுதலைகள்: ஓ.எஸ்.மணியன் கடும் தாக்கு
நாகப்பட்டினம்: எடப்பாடி முதல்வராக வந்து விடக்கூடாது என ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி.தினகரன் போன்ற தறுதலைகள் ஏதேதோ பேசி கொண்டு உள்ளனர் என அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஓ.எஸ்.மணியன் கடுமையாக தாக்கியுள்ளார். நாகப்பட்டினம் அபிராமி சன்னதி திடலில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்து பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தபோது பெண்கள் தங்களது குழந்தையுடன் பேச்சை கேட்க வருவர். கர்ப்பிணிகளும் வருகை தருவர். அதேபோல் தற்போது எடப்பாடி பிரசாரத்துக்கு மக்கள் வருகின்றனர். எடப்பாடி முதல்வராக வர வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கும் நிலையில், அவர் முதல்வராக வந்து விடக்கூடாது என டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்ற சில தறுதலைகள் ஏதேதோ செய்து கொண்டும், ஏதேதோ பேசிக் கொண்டும் உள்ளனர்.
புரையோடி போன கால்களை மருத்துவர் வெட்ட சொல்வது போல அதிமுகவில் புரையோடிய இவர்களை எடப்பாடி வெட்டி போட்டு இருக்கிறார். கட்சியை விட்டு சென்ற டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக பற்றி பேச தகுதி இல்லாதவர்கள். எடப்பாடி செல்லும் பாதை சரியான பாதை. 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அரியணையில் அமர வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.