முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்கிற வரை என்டிஏ கூட்டணில அமமுக சேராது: டி.டி.வி. திட்டவட்டம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அமமுக அந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை என்று டி.டி.வி.தினகரன் கூறினார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுகவை அமித்ஷா தான் இயக்குகிறாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அமமுகவை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அமமுக அந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் அமமுகவின் நிலைப்பாடு. செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி. அவரது நிலைப்பாட்டை பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.
நான் நட்புடன் நெருங்கி பழகியவர்களில் அவரும் ஒருவர். அவரது முடிவை பற்றி விமர்சிப்பது நன்றாக இருக்காது. அவரை பற்றி விமர்சிப்பது அவருக்கு நான் கொடுக்கும் மரியாதையை குறைப்பதாக இருக்கும். மத்திய மந்திரி அமித்ஷாவை நான் சந்திக்க மாட்டேன். அவரும் என்னை அழைக்கமாட்டார். இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அமமுக உறுதியாக இருக்கிறது. அதை இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழியாக ஏற்றோம். தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் சைதை செந்தமிழன், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.வேதாசலம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.