செங்கோட்டையன் பேட்டி எதிரொலி: விவசாயிகளுடன் எடப்பாடி கலந்துரையாடல் திடீர் ரத்து
தேனி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’’ என்னும் பெயரில் மாநிலம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்றிரவு ஆண்டிபட்டி நகரில் பிரசாரம் செய்து விட்டு தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ள ஓட்டல் கூட்ட அரங்கில் தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் மோதலில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை 10 மணியளவில் நிருபர்களை சந்தித்து மனம் திறந்து பேசுவதாக தெரிவித்திருந்தார். அவர் என்ன சொல்லப்போகிறார்; அதன் மூலம் அதிமுகவில் என்ன மாதிரியான புயல் வீசப்போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் நடத்த இருந்த கலந்துயாடைல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்
இன்று கம்பம், போடி மற்றும் தேனியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பேச உள்ளார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் வருகையை கண்டித்து, தேனி நகரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘முக்குலத்தோரை வஞ்சிக்கும் உங்களுக்கு தேவர் மண்ணில் என்ன வேலை; பழனிச்சாமியே தேவர் மண்ணில் காலை வைக்காதே; இவ்வண் தேவர் பேரவை என முகவரி இல்லாத சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் விலகியுள்ள நிலையில், தேவர் பேரவை பெயரில் தேனியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.