எடப்பாடி மீது எனக்கும் மனவருத்தம்; இன்னொரு மாஜி அமைச்சர் குமுறல்: என்ன என்று கேள்வி கேட்டதும் ‘ஜகா’
மதுரை: எடப்பாடி பழனிசாமி மீது எனக்கும் மன வருத்தம் இருக்கத்தான் செய்கிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சோலைஅழகுபுரம் பகுதியில் நேற்று ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அங்கன்வாடி மையத்திற்கான பூமி பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அவரிடம், நிருபர்கள், ‘‘எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர்தான். என்னை நீக்கியதற்காக நான் கோர்ட்டுக்கு போவேன் என்று செங்கோட்டையன் கூறி இருக்கிறாரே?’’ என கேட்டனர்.
அதற்கு பதிலளித்து செல்லூர் ராஜூ கூறியதாவது: நான் மாவட்ட செயலாளர். நிர்வாகிகளாக எனக்குக் கீழே பலர் இருக்கின்றனர். நான் சொல்வது போல அவர்கள் நடந்தால்தான் சரியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக ஆக்க எல்லோரும்தான் பாடுபட்டனர். செங்கோட்டையன்தான் கை தூக்கி, ஒற்றைத்தலைமை வேண்டுமென்றார். அன்றைக்கு எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக ஆக்க வேண்டும் என்றவர் அவர்தான். இன்றைக்கு என்ன வந்து விட்டது? கட்சிக்கு எது நல்லதோ அதை எடப்பாடி செய்கிறார்.
அவர் தலைமையில் நாங்கள் செல்கிறோம். தன்னுடைய ஈகோவை பயன்படுத்துவது என்பது தவறு. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை நீக்கி இருக்கிறார். எத்தனையோ பேர் கட்சியிலிருந்து போனார்கள். வந்தார்கள். அவர்களை எல்லாம் கூப்பிட்டுத்தான் வச்சிருக்கோம். கட்சிக்கு யார் நன்மை செய்தார்களோ, அவர்களை வைத்துத்தான் எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்துகிறார். எனக்குக் கூட பல மன வருத்தம் இருக்கும். அதற்காக நான் ஊடகத்தில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து முறையாக முறையிட வேண்டும்.
அப்படி இல்லையென்றால், அமைதியாக இருந்துவிட்டு பிறகு கேட்கும்போது சொல்ல வேண்டும். இவ்வாறு கூறினார். தொடர்ந்து செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள், ‘உங்களுக்கு மன வருத்தம் இருக்குன்னு சொல்றீங்களே? என்ன மனவருத்தம்’ எனக் கேள்வி எழுப்பியதும், சுதாரித்துக் கொண்ட அவர், ‘யாரு சொன்னா மன வருத்தம் இருக்குன்னு?’ என்று ஜகா வாங்கியவர், ‘நீங்கதானே சொன்னீங்க?’ என நிருபர்கள் திரும்ப கேட்டதும், ‘அது இல்லீங்க... ஒரு எக்சாம்பிள்க்கு சொன்னா, நீங்க வேற.
தேவையில்லாம, இதை டாபிக்கா போட்டு பிரேக்கிங் நியூஸ்னு போட்டுறாதீங்க. ஒரு மனுசனுக்கு ஒரு மன வருத்தம் இருக்குன்னா? என்னைய சொல்லலை. செல்லூர் ராஜூவை சொல்லல. ஒருத்தருக்கு ஒரு மன வருத்தம் இருக்குன்னா அதை பொது வெளியில் சொல்லக்கூடாது. அதுக்காக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பவர்களிடம் போய் சொன்னால் சும்மா விடுவாங்களா? எடப்பாடி பழனிசாமி எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பாரு?
அதுக்காக சொன்னா உடனே செல்லூர் சொன்னாருன்னு பிரேக்கிங் நியூஸ்ல போட்டுறாதீங்க... இதுக்காகத்தான் சொல்றேன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனஸ்தாபம் இருக்கும். ஈகோ பிராப்ளம் இருக்கும். அதை பொது வெளியில் காண்பிக்கக் கூடாது. எடப்பாடி பழனிசாமியிடம் முறையாக முறையிட்டு அவர்களிடம் சொல்ல வேண்டும்னு சொல்றேன். என்னையச் சொல்லல.
எனக்கு ஒன்னும் மனவருத்தமில்லை. என்னை எடப்பாடி பழனிசாமி நல்லாத்தான் வச்சிருக்காரு’’ எனக்கூறி சமாளித்தார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று மாஜி அமைச்சர்கள் 6 பேருடன் சென்று எடப்பாடியிடம் பலமுறை முறையிட்டு அவர் கேட்காததால்தான் நான் ஊடகத்தில் பேட்டி அளித்தேன் என்று செங்கோட்டையன் கூறி உள்ளார். ஆனால், செல்லூர் ராஜூ எடப்பாடியிடம் நேரில் முறையிட வேண்டும் என்கிறார்.