2026ல் எடப்பாடி காணாமல் போவார் தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முடியாது: முத்தரசன் தாக்கு
சேலம்: 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடம் தெரியாமல் போவார். அவர் ஆதரிக்கின்ற பாஜகவும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு கடந்த 15ம் தேதி சேலத்தில் தொடங்கியது. கடைசி நாளான நேற்று செம்படை பேரணி நடந்தது. சேலம் பிரபாத் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணி, சேலம் நேரு கலையரங்கம் வழியாக போஸ் மைதானத்தை வந்தடைந்தது.
பின்னர் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய நிர்வாகிகளான டி.ராஜா, அமர்ஜித்கவுர், டாக்டர் நாராயணா, ஆனிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசியதாவது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925ம் ஆண்டு கான்பூர் நகரில் தொடங்கப்பட்டது. கட்சி நூற்றாண்டை கொண்டாடுகிறது. பீகாரில் வாக்காளர் பட்டியல் மோசடிக்கு உள்ளாகி இருக்கிறது. வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளது. நாளை தமிழகத்திலும் இந்த நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுதந்திர தின போராட்டத்தில் ஆர்எஸ்.எஸ்.க்கு எந்த பங்கும் கிடையாது. பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற துடிக்கிறது. பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் ஜனநாயக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: சேலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்ட் கட்சி அழித்து விட்டது, முகவரியே இல்லை என்கிறார். அப்படி கூற அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சியை பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி அவருக்கு கிடையாது. அவரை போல் நாங்கள் அடிமைகள் அல்ல. பாஜ காலில் விழுந்து கிடக்கிறார். அவர் எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது உலகத்திற்கே தெரியும். அப்படிப்பட்டவர், எங்களை பார்த்து அடிமை என்கிறார். தமிழ்மக்களுக்கு துரோகம் செய்யும் கட்சியோடு, மதசார்பற்ற அரசியலமைப்புக்கு விரோதமாக இருக்கும் கட்சியோடு எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடம் தெரியாமல் போவார். அவர் ஆதரிக்கின்ற பாஜகவும் காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
நிர்வாகிகள் தேர்வு தள்ளிவைப்பு;
சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் மாநில குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் மாநில நிர்வாகிகள் தேர்ந்ெதடுக்கப்படவில்லை. மாநில நிர்வாகிகள் தேர்வு ஒருவாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.