எடப்பாடியுடன் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் சந்திப்பு சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு கேட்டதாக தகவல்: தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு
சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் சந்தித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக அன்புமணிக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதில் கோபமடைந்த ராமதாஸ், பாமகவின் தலைவராக பதவி வகித்த அன்புமணியின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என்றும், தாங்கள் தான் உண்மையான பாமக என்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் ராமதாஸ் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. அதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரு பிரிவாக செயல்பட்டு வரும் நிலையில், தந்தை- மகன் தனித்தனியாகவே கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நேற்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் சந்தித்து பேசினர். பாமக வழக்கறிஞர் கே.பாலு, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் மு.ஜெயராமன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இதனால், அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி டிச.17ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக ஆதரவு கோரி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அன்புமணி சார்பில் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.