எடப்பாடி பிரசாரத்தில் அடாவடி ஆம்புலன்ஸ்சுக்கு வழிவிடாமல் காரை குறுக்கே நிறுத்தி அதிமுகவினர் மறியல்
தென்காசி: அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரத்தை நேற்று தென்காசியில் மேற்கொண்டார். இதற்காக அவரை வரவேற்று தென்காசி நகர் முழுவதும் ஏராளமான கொடிகளும் பேனர்களும் அனுமதியின்றி வைத்திருந்தனர். இதனால் தென்காசி - திருநெல்வேலி சாலையில் வேட்டைக்காரன் குளம் அருகில் நேற்று மாலை அதிமுகவினர் வைத்திருந்த கொடிகளை போலீசார் அகற்றியதாக கூறி அதிமுகவினர் சிலர் சாலையின் குறுக்கே தங்களது காரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பயணிகள் பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக்கொண்டது. பேருந்துகளில் பயணம் செய்த பெண்கள் சிலர் மறியலில் ஈடுபட்ட கட்சியினரிடம் மறித்து நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றுமாறு கூறினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தென்காசி-திருநெல்வேலி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.