எடப்பாடி-செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கடும் மோதல்: கோபியில் பரபரப்பு
கோபி:அதிமுக 54வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக கோபி தினசரி மார்க்கெட் அருகே எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தரப்பினரும், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த கோபி நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ் தலைமையிலான அணியினரும் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர். இதில், செங்கோட்டையன் தரப்பினருக்கு காலை 8 மணிக்கும், அதே போன்று பிரினியா கணேஷ் தலைமையிலான அணியினருக்கு காலை 9 மணிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், எம்ஜிஆர் சிலையின் இருபுறமும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பு செயலாளராக உள்ள ஏ.கே.செல்வராஜ் புகைப்படத்துடன், தன்னுடைய படத்தையும் வைத்து இரண்டு பிளக்ஸ் பேனர்களை வைத்துவிட்டு சிலைக்கு மின்விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தார். இந்நிலையில், அந்த பேனரை அகற்ற வேண்டும்.
இல்லை என்றால் தாங்களும் பேனர் வைக்க போவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தரப்பினர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். ஆனால், பேனரை அகற்ற நகர செயலாளர் பிரினியோ கணேஸ், மறுத்ததோடு பிளக்ஸ் பேனரை அகற்றினால் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்ததை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்ட சம்பவத்திற்கு இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, எம்ஜிஆர் சிலை அருகே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வைத்திருந்த பேனருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என கடந்த மாதம் 5ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த மாநில அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்திய பாமா, ஒன்றிய செயலாளர்கள் தம்பி என்கிற சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரின் கட்சி பதவிகளையும் பறித்தார். அதைத்தொடர்ந்து கோபியில் அதிமுக இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பிளக்ஸ் பேனரால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.