எடப்பாடி பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக் கொண்டால் தற்கொலைக்கு சமம்: டி.டி.வி. தினகரன் பேட்டி!
சிவகங்கை: எடப்பாடி பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக் கொண்டால் தற்கொலைக்கு சமம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் 224வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அவர்களது சிலைகளுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; எடப்பாடி பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக் கொண்டால் தற்கொலைக்கு சமம். கூவி கூவி அழைக்கும் கல்லாப்பெட்டி பழனிசாமியை தோளில் தூக்கி வைத்து கொள்ள விஜய் வருவாரா?. தொண்டர்களை உற்சாகப்படுத்த பழனிசாமி ஏதேதோ கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் துரோகத்துக்கு அவர் நிச்சயம் தேர்தலில் வீழ்த்தப்படுவார். தேர்தல் நேரத்தில் வியப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கூட்டணி உருவாகும். விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என்றேன்; விஜயுடன் கூட்டணிக்கு செல்வோம் என சொல்லவில்லை. கூட்டணிக்கு வாங்க வாங்க என எடப்பாடி பழனிசாமி கூவி கூவி அழைப்பதை தமிழக மக்கள் நகைக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.