எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்ந்து மோதல் ; அதிமுகவில் ஓரங்கட்டப்படும் செங்கோட்டையன்: 5ம் தேதி முக்கிய முடிவு
கோபி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம், 5ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என கூறியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தக் கூட்டத்தில் செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா? என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.