எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குக்கு தடை விதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றது. சூரிய மூர்த்தி என்பவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பழனிசாமி தரப்பில் உரிமையியல் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, பழனிசாமி மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.பி பாலாஜி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் சூரிய மூர்த்தி அதிமுக உறுப்பினரே இல்லை என்றும் வழக்கு தொடர எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்தார். அந்த வழக்கில் நிராகரித்த மனு உத்தரவுக்கு எதிராக தடை விதித்து எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவு நேற்றைய தினம் பிறப்பிக்கப்பட்டது.இந்த நிலையில், இன்று சூரிய மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன் இந்த வழக்கில் முன்கூட்டியே கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறோம்.
இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே எங்களுடைய தரப்பு வாதங்களை கேட்பதற்காக கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறோம். ஆனால், பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனுவை தாக்கல் செய்து இந்த தடை உத்தரவை பெற்றுள்ளனர். எனவே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக பிறப்பித்த தடை உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டார். அதே சமயம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25க்கு தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.