எடப்பாடி அழைப்பை முற்றாக நிராகரிக்கிறோம்; சிவப்பு கம்பள வரவேற்பு அல்ல, ரத்த கம்பள வரவேற்பு: முத்தரசன் பேட்டி
கோவை: எடப்பாடி பழனிசாமிக்கு முதிர்ச்சியான அரசியல் தேவை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 17ம் தேதி சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு போது, திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என தெரிவித்து இருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளானது.
இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநாடு துவங்கியது. மேட்டுப்பாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநாட்டை தொடங்கி வைத்து முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; எடப்பாடி பழனிசாமிக்கு முதிர்ச்சியான அரசியல் தேவை. முரண்பட்ட கூட்டணியில் இருந்து கொண்டு பழனிசாமி அழைப்பதை முற்றாக நிராகரிக்கிறோம். தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் பாஜக அரசு சதி செய்கிறது. தொகுதி சீரமைப்பு சதியை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா?. எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு சிவப்பு கம்பள வரவேற்பு அல்ல, ரத்த கம்பள வரவேற்பு என்றார். மேலும், அரசியல் கட்சிகள் மற்றொரு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுவது சகஜம் தான். தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்பு. ஆனால் பாஜக என்ன சொல்கிறது என தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது என்று அவர் கூறினார்.