பாஜவிடம் மொத்தமாக சரணடைந்து அடிமை இயக்கம் நடத்துகிறார் எடப்பாடி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு குற்றச்சாட்டு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் எங்கே போனது அந்த வாக்குறுதி. முதல்வர் குறித்து ஒருமையில் பேசுவது எதிர்க்கட்சி தலைவரின் தரத்தை காட்டுகிறது. பாஜவிடம் மொத்தமாக சரணடைந்து, அடிமை இயக்கம் நடத்துகிறார் எடப்பாடி. அவர் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் புளிச்ச பயணம். தீர்வு இல்லாத பயணம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் என்ற பெயரிலே மாற்றி மாற்றி பேசி வருகிறார்.
நடந்த அத்தனை தேர்தல்களிலும் எடப்பாடி, அண்ணாமலைக்கு தோல்வியையே பரிசாக தந்தவர்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதே பாணியில் வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வியையே அவர்களுக்கு திமுக பரிசு அளிக்கும். மக்களோடு மக்களாக பயணம் செய்யும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அவர் முன்னெடுத்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் மக்கள் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. திருவிக நகரில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 2400 மனுக்கள் பெறப்பட்டு அங்கேயே 600 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழை ஆன்மிகம் வளர்த்தது, ஆன்மிகத்தை தமிழ் வளர்த்தது. தமிழும் ஆன்மிகமும் ஒன்றுதான். இது தெரியாமல் சிலர் பிதற்றிக்கொண்டு உள்ளார்கள்.இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில், மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.