எடப்பாடி பிரசார கூட்டத்தில் லாரி மோதி ஒருவர் பலி: டூவீலர்கள் மோதலில் 2 பேர் படுகாயம்
உசிலம்பட்டி, செப். 5: எடப்பாடி பிரசார கூட்டத்தில் அதிவேகமாக வந்த லாரி மோதி ஒருவர் பலியானார். டூவீலர்கள் மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்டத்தில் 4வது நாளாக நேற்று பிரசாரம் செய்தார். நேற்று மாலை வாடிப்பட்டியில் பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து, உசிலம்பட்டியில் பிரசாரத்திற்கு வர இருந்தார். இதற்காக, உசிலம்பட்டி பகுதியில் உள்ள திருமங்கலம் விலக்கு பகுதியில் பிரசாரத்திற்கு ஆட்களை சேர்த்துக் கொண்டிருந்தனர்.
பிரசாரம் நடக்கும் இடத்திலிருந்து 100 அடி தூரத்தில், ரோட்டில் திடீரென அதிவேகத்தில் ஒரு லாரி வந்தது. அந்த லாரி ஓரத்தில் சென்று கொண்டிருந்த டூவீலர் மீது மோதியதில், உசிலம்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (39) அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவர் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும், யோகா பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் மீது மோதிய லாரி மேலும் போலீஸ் வாகனம், செய்தியாளர்கள் வாகனம் ஆகியவற்றின் மீதும் மோதி நின்றது.
இதில் இரு வாகனங்களும் சேதமடைந்தன. லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. லாரியை விட்டு கீழிறங்கி டிரைவர் ஓடிவிட்டார். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இதே பகுதியில் எடப்பாடி பிரசாரத்தை காண வந்தபோது, டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி சந்திரம்மாள், ஆதிமூர்த்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.