ஒட்டுக்கேட்பு கருவியை வச்சது யாரு என்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
அப்போது மாவட்ட நிர்வாகியான மாஜி சபாநாயகரின் தம்பி, இந்த கூட்டத்திற்காக யார் யார் எவ்வளவு செலவிடுவீர்கள், எத்தனை பேரை அழைத்து வருவீர்கள் என ஏலம் விடும் பாணியில் கேட்டாராம்.. இதற்கு 3 பேரும் போட்டிப்போட்டுக் கொண்டு ஏலம் கேட்பதை போல தொகையையும், எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டு போயிருக்காங்க.. இதில், ஊரின் பெயரை முன்னால் கொண்டவரோ ரூ.10 லட்சம் செலவில் 5 ஆயிரம் பேரை அழைத்து வருவதாக கூற, ராஜாவின் பெயரைக் கொண்டவர் எல்லோரையும் விட அதிகளவில் செலவிட்டு கூட்டத்தை காட்டுகிறேன் என சவால் விட்டிருக்கிறார்.
பதிலுக்கு சிவன் பெயரைக் கொண்டவர், ஒரு கோடி வரை செலவிட தயாராக உள்ளதாக டாப் லெவலுக்கு போயிருக்கிறார். பதவியில் இருந்தபோது யாருக்கும், எதுவும் செய்யாத இந்த 3 பேரும் வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து எப்படியாவது இந்த தொகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கத்தில் இப்போதே கோடிகளை இறங்கி விட தயாராகிவிட்டனரே என இலைத்தரப்பினர் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வியாபாரியோடு கைகோர்த்துக்கொண்டு தங்க நகை மோசடியை மட்டுமே விசாரிக்கும் மூவர் கூட்டணி பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் சிட்டி போலீசில் நான்கு எழுத்து நடிகை பெயர் கொண்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வேலை செய்கிறார். இவர், 4 வருஷமா ஒரே இடத்தில் வேலை செய்கிறாராம்.. உள்ளூரை சேர்ந்த தங்க வியாபாரி ஒருவரோடு கைகோர்த்துக்கிட்டு தங்க நகை மோசடி புகார்களை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து விசாரிச்சு பஞ்சாயத்து பேசி பணத்திற்கு பதிலா தங்க நகைகளை வாரி சுருட்டி வருகிறாராம்..
இவருக்கு உதவியா, செல்வம் நிறைந்த புரத்தை சேர்ந்த இன்ஸ் ஒருத்தரும் செயல்பட்டு வருகிறாராம்.. சமீபத்தில் மான்செஸ்டர் சிட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி, அவர்கிட்ட இருந்து ஒரு கிலோ தங்கத்தை வலுக்கட்டாயமா பறித்துவிட்டார்களாம்.. இதை ஐபிஎஸ் அதிகாரி, இன்ஸ், வியாபாரி என மூவர் கூட்டணி பங்கு போட்டுக்கொண்டார்களாம்..
செல்வபுரம், பொன்னையராஜபுரம் பகுதியில் அதிகளவில் தங்கம் மற்றும் நகை தொழில் நடந்துட்டு இருக்கிறதால இந்த பகுதியில் மட்டுமே இந்த அதிகாரி நாட்டம் செலுத்துகிறாராம்.. கணவருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, மேலிடத்தில் தாஜா செய்து, பணி நீட்டிப்பு வாங்கிக்கொண்டே வருகிறாராம்.. அதேபோல மேலதிகாரிகளிடம் புகார் மனு எதுவும் சென்றுவிடக்கூடாதுன்னு கவனமாக இருக்கிறாராம்.. அதையும் மீறி இவரது தில்லாலங்கடி வேலை குறித்தும், ஒரு மோசடி வழக்கில் மறுவிசாரணை கோரியும், கோவை தொழிலதிபர் ஒருவர் கோர்ட்டில் ஆர்டர் வாங்கி வந்துவிட்டாராம்..
இதனால், இந்த பெண் கலக்கத்தில் இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரகசிய பேச்சு மகனின் காதுக்கு போனதுதான் ஒட்டுக்கேட்பு கருவி இருந்ததை கண்டுபிடிக்க காரணமாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் பாதிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தொண்டர்கள் தானாம்.. தொடக்கத்தில் சிறிய அளவில் இருந்த பிளவு நாளடைவில் தன் பெயரை பயன்படுத்தவே கூடாது என்று சொல்லும் அளவுக்கு போயிட்டதாம்..
மகனை நினைத்து தந்தையும், தந்தையை நினைத்து மகனும் படும் வேதனை ரொம்பவே அதிகமா இருக்குதாம்.. ஒரு கட்டத்தில் தனது பேச்சை கேட்க மறுத்த மகனுக்கு தந்தையின் நடவடிக்கை ரொம்பவே அதிர்ச்சியா இருந்திருக்கு.. இதனால் அவரது திட்டத்தை தெரிந்து அதற்கேற்றாற் போல செயல்படுத்தி வந்திருக்காரு.. ரெண்டு அணியிலும் இருக்கும் ஆதரவாளர்கள் மூலம் தெரிந்து கொண்டு, எதிர் தாக்குதலை மகன் செஞ்சிருக்காரு..
இதன்படி தான் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும் அழைத்து, தந்தை கூட்டும் கூட்டத்திற்கு செல்லகூடாது என்பதும் நடந்திருக்காம்.. இந்த நிலையில் தான் தந்தை நெஞ்சுக்கு இனிய நண்பரான ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியை அழைத்து பேசியிருக்காரு.. அந்நேரத்தில் அறையில் இருந்த அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, ரெண்டு பேர் மட்டும் எதிர்காலத்தை பற்றி நீண்டநேரம் ஆலோசனை செஞ்சியிருக்காங்க..
ஆனால் இந்த ரகசிய பேச்சு, எடுத்த முடிவுகள் மகனின் காதுக்கு உடனே போனதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. அந்த நீதிபதியின் காதுக்கு பேச்சின் முழுவிவரமும் போனதால் அவர் ரொம்பவே ஷாக்காயிட்டாராம்.. நானும் சொல்லல.. தந்தையும் வெளியே சொல்லியிருக்க மாட்டாரு.. அதெப்படி வரிவிடாமல் பேசியது வெளியே போனது என்ற ஆலோசனைக்கு பிறகு தான், வீட்டில் தந்தையின் இருக்கைக்கு அடியில் சோதனை செஞ்சபோது, ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்ததாம்..
ஒட்டுக்கேட்பு கருவியின் முதற்கட்ட ஆய்வில், பேசியதன் விவரம் யாருக்கு சென்றதோ அவரை அடையாளம் கண்டுபிடிச்சிருக்காங்க.. அந்த நபர் மகனின் இதயத்தில் இடம்பிடிக்க இதுபோன்ற வேலையை செஞ்சியிருப்பது தெரியவந்திருக்காம்.. அதேநேரத்தில் கருவியை பொருத்தியது யாருன்னு தந்தை தரப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ரெண்டு பேர் மீது சந்தேகம் வந்திருக்காம்..
அவர்களையும் தந்தை தரப்பினர் சந்தேகப்பட்டியலில் வச்சிருக்காங்களாம்.. எல்லா தகவலும் தந்தைக்கு தெரிந்திருந்தாலும் போலீசாரின் ரிப்போர்ட் கிடைத்ததும் அதன்பிறகு அடுத்தக்கட்டத்துக்கு செல்லலாம் என முடிவுல இருக்காராம் தந்தை.. இந்த ஒட்டுக்கேட்டு கருவி பொருத்தப்பட்ட விவகாரத்தில் மகனுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பே இல்லை என பாட்டாளிகள் நம்புறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.