அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பச்சிளம் குழந்தைகளை கவசம்போல் காத்த செவிலியர்கள்: மருத்துவமனை சிசிடிவியில் நெகிழ்ச்சி
கவுகாத்தி: அசாமில் நிலநடுக்கத்தின்போது தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை செவிலியர்கள் பாதுகாத்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தின் வடகிழக்கு மாநிலங்களில் நேற்று மாலை 4.40 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாமின் உதல்குரி மாவட்டமாகும். இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
உதல்குரி மாவட்டத்தில் விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் காயமடைந்தனர். சில மாவட்டங்களில் வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசி ஒன்றிய அரசின் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில், அசாமின் நாகோன் நகரில் உள்ள ஆதித்யா தனியார் மருத்துவமனையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி ஒன்று அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செவிலியர்கள், உடனடியாக விரைந்து சென்று குழந்தைகளை பாதுகாத்தனர். அறை விளக்குகள் அணைந்து எரிந்தபோதும், பதற்றமடையாத செவிலியர்கள் குழந்தைகளை கைகளில் ஏந்தியும், தொட்டில்களுக்கு அருகே கவசம்போல் நின்றும் நில அதிர்வு முடியும் வரை காத்திருந்தனர். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளைக் காத்த இந்த செவிலியர்களின் வீரச் செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.