பூமிக்கு திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்சு சுக்லா : கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் டிராகன் விண்கலம் இறங்கியது!!
இறங்கியது.ஆக்சியம்-4 வணிக திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா, முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு ஆகியோர் கடந்த மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இதன் மூலம் 41 ஆண்டுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற சாதனைகளை சுபான்சு சுக்லா படைத்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆய்வுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்ததாக நாசா தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சுபான்சு சுக்லா குழுவினர் பூமிக்கு திரும்பும் நிகழ்வு நேற்று பிற்பகல் தொடங்கியது. பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற அதே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கிரேஸ் விண்கலத்தில் சுபான்சு உட்பட 4 வீரர்களும் பாதுகாப்பு கவச உடையுடன் ஏறினர். விண்கலத்தின் கதவுகள் பிற்பகல் 2.37 மணிக்கு மூடப்பட்டன. கடைசி நேர பரிசோதனைகளுக்குப் பிறகு டிராகன் விண்கலம், 10 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து விண்வெளியில் மிதந்தபடி பாதுகாப்பாக விலகியது.
பூமியை நோக்கி விண்கலம் 22.5 மணி நேர பயணத்தை தொடங்கியது. இந்த நிலையில், பூமியை நோக்கி வந்த விண்கலத்தின் வேகம் பாராசூட்கள் மூலம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. பூமியிலிருந்து 5.7 கிமீ உயரத்தில் விண்கலம் வந்ததும் முதல் பாராசூட்விரிக்கப்பட்டது. பின்னர் 2 கிமீ உயரத்தில் பிரதான பாராசூட்கள் விரிக்கப்பட்டு விண்கலத்தின் வேகம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விண்கலம் அமெரிக்காவின் நேரப்படி அதிகாலை 2.31 மணிக்கு கலிபோர்னியோ கடலில் தரையிறங்கியது. விண்கலம் கடலில் விழும் நிகழ்வு ஸ்ப்ளாஷ் டவுன் எனப்படும். வெற்றிகரமாக ஸ்ப்ளாஷ் டவுன் முடிந்ததை அடுத்து, படகு மூலம் விண்கலம் கப்பலில் ஏற்றப்பட்டது. விண்கலத்தின் கதவு திறக்கப்பட்டதை அடுத்து 4 வீரர்களும் வெளியே அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அதன் பின் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவார்கள். விண்கலத்தில் கடலில் இறங்கிய 4 வீரர்களும் பத்திரமாக உள்ளதாக நாசா தகவல் அளித்துள்ளது. சுபான்சு சுக்லா பூமிக்கு திரும்பியதை கண்டு அவரது பெற்றோர் கண்ணீர் மல்க நெகிழ்ச்சி அடைந்தனர். சுபான்சு சுக்லாவை வரவேற்று அவரது குடும்பத்தினர் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய விமானப்படை வீரரான சுபான்சு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராவார். அவரது இந்த வெற்றிகரமான விண்வெளிப்பயணம் ககன்யான் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.