குளத்தூர்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (32). பைனான்சியர். இவரது மனைவி சோலையம்மாள் (30). இவர்களுக்கு சாதனா (5), சாகனா (4) என இரு பெண் குழந்தைகள். நேற்று முன்தினம் இரு பெண் குழந்தைகளுக்கும் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காதணி விழா நடந்தது. விழா முடிந்த மறுதினமான நேற்று காலை இரு பெண் குழந்தைகள், உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 15 பேர் ஆட்டோ மற்றும் பைக்குகளில் வேம்பார் முகத்துவாரம் பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்றனர். கடலில் அலையின் சீற்றம் காணப்பட்ட நிலையில் குமாரின் தம்பியான டேனி என்பவர் குழந்தை சாதனாவை தூக்கிக் கொண்டு கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த அலை சிறுமி மற்றும் டேனியை இழுத்துச் சென்றதில் நீரில் மூழ்கி மாயமாகினர். தகவலறிந்து வந்த போலீசார், சுமார் 3 மணி தேடி டேனி மற்றும் சாதனாவை சடலமாக மீட்டனர்.