அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை காங். எம்பி சுதா செயினை பறித்த மர்ம நபர்கள்: டெல்லியில் பரபரப்பு
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அரசு இல்லம் வழங்கப்படாத தமிழ்நாடு எம்பிக்கள், டெல்லியில் சாணக்கியாபுரியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி வருகின்றனர். இந்த பகுதியானது உயர் பாதுகாப்புப் பகுதியாகும். இந்த நிலையில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி வழக்கம் போல் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது அவரது கழுத்தில் இருந்து நான்கு பவுன் மதிப்பு கொண்ட தங்க செயினை இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பறித்து கொண்டு தப்பி விட்டனர்.
இதையடுத்து எம்பி சுதா செய்தியாளர்களிடம் கூறியதில்,\\”கடந்த ஓராண்டாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் 301ம் எண் அறையில் தங்கிப் பணியாற்றி வருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இந்நிலையில், இன்று(நேற்று) காலை 6.15 மணியளவில் திமுக மாநிலங்களவை எம்பி சல்மாவுடன் சாணக்யபுரியில் உள்ள போலந்து தூதரகத்தின் அருகே இருவரும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தோம். அப்போது, எதிர்திசையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள், எனது கழுத்திலிருந்த நான்கு சவரன் மதிப்பு கொண்ட தங்கச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். அப்போது என் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. சுடிதாரும் கிழிந்தது விட்டது.
டெல்லியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக செயினை கொள்ளையன் பறித்த உடனே நாங்கள் உதவி கேட்டு கத்தினோம். ஆனால் ஒருவரும் வரவில்லை.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். குறிப்பாக தூதரகங்கள் நிறைந்த மற்றும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் உயர் பாதுகாப்புப் பகுதியில் பெண் எம்பியான எனது செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் புகார் கடிதம் எழுதியுள்ளேன்.
இதில் நாட்டின் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இச்சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். செயின் பறிப்பு குற்றவாளியை உடனடியாகக் கண்டுபிடித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். குறிப்பாக இதுபோன்ற ஒரு செயின் பறிப்பு சம்பவம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே நடைபெற்றிருக்கிறது என்றால், இந்த நாட்டில் மற்ற பெண்கள் செல்லும்போது அவர்களுக்கு எதிரான கொடுமை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனது செயின் பறிப்பு விவகாரத்தில் டெல்லி காவல்துறையினர் மிகவும் அலட்சிய போக்குடன் நடந்து கொண்டனர். அவர்கள் நினைத்து இருந்தால் வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து கொள்ளையனை உடனடியாக பிடித்து இருக்கலாம். ஆனால் அதனை செய்ய தவறிவிட்டார்கள்.இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து எழுப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
* திமுக வலியுறுத்தல்
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா செயின் பறிப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளார். மேலும் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.