இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடிவரவு |பிரிவு செயல்முறைகளை எளிதாகவும், வேகமாகவும் முடிக்க இ-அரைவல் கார்டு அறிமுகம்!
புதுடெல்லி: இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு செயல்முறைகளை எளிதாகவும், வேகமாகவும் முடிப்பதற்கு வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் இந்த இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் இனி விமான நிலையத்தில் வரிசையில் நின்று காகிதப் படிவங்களை நிரப்பத் தேவையில்லை. பயணத்திற்கு முன்போ அல்லது வருகையின் போது ஆன்லைனில் எளிதாக இந்த படிவத்தை பூர்த்தி செய்யலாம். இந்த இ-அரைவல் அட்டை என்பது இந்திய குடிமக்கள் அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தேவையில்லை. இது முழுமையாக வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இ-அரைவல் அட்டை தேவைப்படுபவர்கள் இந்திய குடியேற்றப் பிரிவு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதளம் வழியாகவும், சு-சுவாகதம் என்ற செல்போன் செயலி வழியாகவும், இந்திய விசா ஆன்லைன் இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். தங்களது விமானம் வெளிநாட்டிலிருந்து புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும். விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் சேமிக்கப்படுவதால், விமான நிலையத்தில் நேரம் வீணாவதை தவிர்க்கலாம். குடிவரவு அதிகாரிகள் டிஜிட்டல் முறையில் பயணியின் தகவல்களை உடனே அணுகி சரிபார்க்க முடியும். அதே நேரம், இந்த இ-அரைவல் அட்டை விசா கிடையாது. சுற்றுலா, வணிகம், படிப்புக்காக வரும் வெளிநாட்டுப் பயணிகள் கண்டிப்பாக விசா வைத்திருக்க வேண்டும். இந்த இ-அரைவல் அட்டை என்பது, நாம் இந்தியா வருவதற்கு முன்னதாக தேவைப்படும் ஒரு அனுமதிச் சீட்டு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.