தசராவை கொண்டாடும் வகையில் அக்.3ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு பணியாளர் சங்கம் கோரிக்கை
சென்னை: தசரா பண்டிகை கொண்டாடும் வகையில் அக்டோபர் 3ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் மகிமைதாஸ், மாநில தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை:
எதிர்வரும் அக்டோபர் 1ம் தேதி (புதன்கிழமை) ஆயுத பூஜையும், 2ம் தேதி (வியாழக்கிழமை) காந்தி ஜெயந்தியையும், விஜயதசமியையும் முன்னிட்டு அரசு விடுமுறை தினங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) பணிநாளாகவும் அதற்கடுத்த தினங்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என அரசு விடுமுறை தினங்களாகவும் உள்ளது.
தசரா பண்டிகையையொட்டி நீதிமன்றங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் 27ம் தேதி (நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தசரா பண்டிகையை கொண்டாடவும், தீபாவளிக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏதுவாக, பணி நாளான அக்டோபர் 3ம் தேதியை (வெள்ளிக்கிழமை) தமிழக அரசு சிறப்பு பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.