தசரா திருவிழாயையொட்டி குலசேகரன்பட்டினத்தில் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்..!!
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பத்தர்கள், பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 2.10.2025 அன்று சூரசம்கார நிகழ்வு மற்றும் 3.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைகிறது.
அதன்படி திருவிழாவின் முக்கிய நாட்களான 1.10.2025 முதல் 3.10.2025 ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக மாவட்ட எஸ்.பி. தலைமையில் சுமார் 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு 20க்கும் மேற்பட்ட குற்றப்புலனாய்வு காவல்துறையினர் (Crime Team) 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர்.
காவல்துறையினரின் 2 டிரோன் கண்காணிப்பு குழுவினர் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து இடங்களிலும் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் முக்கிய இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டு அது நேரடியாக சிசிடிவி கண்காணிப்பு திரை மூலம் கண்காணிக்கப்படும்.
காணாமல் போன குழந்தைகள் மற்றும் பக்தர்களை கண்டறிவதற்கும் உடனடியாக அவர்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கவும் ஆண் மற்றும் பெண் காவல் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடற்கரை பகுதிகளில் நீராடும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அங்கு நீச்சல் தெரிந்த காவல் பேரிடர் மீட்பு குழுவினர் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவர்.
மேலும் திருவிழா முடிந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அதுகுறித்து அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து அவரச உதவி எண்களான 9498101852, 9498101833, 0461 2340393 மற்றும் தூத்துக்குடி காவல்துறை ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். எனவே அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை சிறப்பாக நடத்திட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.