எஸ்ஐஆர் பணியின் போது இரட்டைப் பதிவுகள் இல்லாதவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்
*அரசியல் கட்சியினருக்கு கலெக்டர் வேண்டுகோள்
ஊட்டி : எஸ்ஐஆர் பணியின் போது இரட்டைப் பதிவுகள் மற்றும் வீட்டில் இல்லாதவர்கள் குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யாமல் இருக்க பிஎல்ஓ.,க்களுடன் சேர்ந்து வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையம், பீகார் மாநிலத்தை தொடர்ந்து 2வது கட்டமாக தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த 4ம் தேதி துவங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
தூய்மையான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்ற கருப்பொருளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைப்பெற்று வருகிறது. கடைசியாக கடந்த 2002ம் ஆண்டில் அதாவது 23 ஆண்டுக்கு முன்பு சிறப்பு தீவிர திருத்தமானது நடந்தது.
வாக்காளர் பட்டியலில் தொடர்ச்சியான இடமாற்றம், ஒரே வாக்காளர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது, இறந்த வாக்காளர்கள் நீக்கப்படாதது, வெளிநாட்டவர்களின் தவறான சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை சரி செய்து தூய்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்க சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடக்கவுள்ளது. பயிற்சி பெற்ற அலுவலர்கள் வீடு வீடாக சென்று தீவிர திருத்தத்திற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி அவற்றை பூர்த்தி செய்த பின்னர் தற்போது திரும்ப பெற்று வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது ஆர்டிஓ, தாலுகா மற்றும் நகராட்சி போன்ற அலுவலங்களில் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது சிறப்பு திருத்தம் குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதுடன், வார இறுதி நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி உள்ளனர். தங்களின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்களை திரும்ப பெற்று வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் வழங்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், இடம் பெயர்ந்த வாக்காளர்கள், இறந்தவர்கள், வீடு வீடாக கணக்கெடுப்பு செய்யும் பணியின்போது வீட்டில் இல்லாதவர்கள், இரட்டைப் பதிவுகள் ஆகியவற்றை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் சேர்ந்து சரிபார்க்கவும் வாக்குச்சாவடி முகவர்களை கேட்டுக் கொண்டார்.
விண்ணப்ப படிவங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் வரும் டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். டிசம்பர் 9ம் தேதி முதல் ஜன.,31ம் திருத்தம் செய்தல், சரி பார்த்தல் பணிகள் முடிக்கப்பட்டு இறுதி பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியர் (பொது) லோகநாயகி, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த் உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.