ராமேஸ்வரத்தில் ஆபரேஷன் சாகர் கவாச் 14 டம்மி தீவிரவாதிகள் சிக்கினர்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகையின் போது தீவிரவாதிகள் போல ஊருவ முயன்ற 14 பேரை மரைன் போலீசார் பிடித்தனர்.பயங்கரவாதிகள் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாக கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும்விதமாக ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தமிழக காவல்துறை, மரைன் போலீஸ், இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, சுங்கத்துறை, வனத்துறை மற்றும் மீன்வளத்துறையினர் பங்கேற்பார்கள். இதில் போலீசார், பயங்கரவாதிகள் போன்று தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை பாதுகாப்பு படையினர் பல குழுக்களாக பிரிந்து தடுத்து தாக்குதல் முயற்சியை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபடுவர்.
ராமேஸ்வரம் தீவு கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. மரைன் போலீசார் ரோந்து படகுகளில் அக்னி தீர்த்தக்கடல், ஓலைக்குடா, பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் 2 படகுகளில் ஊடுருவிய 14 பேரை மரைன் போலீசார் பிடித்தனர். இவர்கள் கடற்படை, கடலோர காவல்படையை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஒத்திகை இன்று மாலை 6 வரை நடைபெறுகிறது.