நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை ரெய்டு: கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பூடான் நாட்டின் ராணுவத்தின் உயர்ரக வாகனங்கள் சமீபத்தில் ஏலமிடப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தவர்கள் அங்கிருந்து இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு அந்த வாகனங்கைள அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். வாகனத்தின் மதிப்பை மறைத்தும், விற்பனை தொகையை மறைத்தும் ஒன்றிய அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சோதனை; பூடானில் நும்கூர் என்றால் வாகனம் என அர்த்தம்.
அந்த வகையில் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிருத்விராஜ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளில் இன்று காலை முதல் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சியில் உள்ள துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகள் உள்பட மொத்தம் 30 இடங்களில் இன்று திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் (Customs Officials)அதிரடியாக சோதனையை மேற்கொண்டுள்ளனர். பிரித்விராஜ் வீட்டில் அந்த கார் இல்லாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். பூட்டான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.