சென்னையில் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னை: சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக இந்தியாவில் மறுபதிவு செய்து விற்பனை செய்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்காலைக்கல் உள்பட பலரது வீடுகளில் சுங்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இதில் நடிகர் துல்கர் சல்மானிடமிருந்து தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட லேண்ட்ரோவர் கார் உள்பட 2 கார்கள், அமித் சக்காலக்கல்லிடமிருந்து 6 கார்கள் என கேரளா முழுவதும் 39 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட 39 கார்களில் மற்றவர்களின் 33 கார்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணை நிலுவையில் இருப்பதால் துல்கர் சல்மானின் கார்களை விடுவிக்கப்படவில்லை. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்துகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கோட்டயம், மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் கொச்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் வீடுகளிலும் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனைநடத்தி வருகின்றனர்.
5 மாவட்டங்களில் வாகன விநியோகஸ்தர் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.