துலீப் டிராபி தொடரில் கே.எல்.ராகுல், வாஷிங்டன், சிராஜ் தேர்வு செய்யப்படாதது ஏன்?: மாநில கிரிக்கெட் சங்கங்கள் மீது பிசிசிஐ கடும் கோபம்
மும்பை: கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என இந்தியா தோல்வி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 3-1 என தோல்வியால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து டெஸ்ட்டில் ஆடும் முன்னணி வீரர்கள் அனைவரும் சர்வதேச போட்டிகள் இல்லாத நேரத்தில் உள்நாட்டு தொடர்களில் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு ரஞ்சி போட்டிகளில் ரோகித்சர்மா, கோஹ்லி, ரிஷப் பன்ட் என முன்னணி வீரர்கள் அனைவரும் ஆடினர். இந்நிலையில் துலீப் டிராபி தொடருக்கான தென்மண்டல அணியில் கே.எல்.ராகுல் முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற வில்லை.
2025-27 ஆண்டு சீசன் துலீப் டிராபி தொடரின் பிசிசிஐயில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் சேர்க்கப்படாததை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மாநில சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. பிசிசிஐ பொது மேலாளர் அபே குருவில்லா, அனைத்து சங்கங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். ஆனால் அது முதன்மையாக தென் மண்டலத்திற்காக எழுதப்பட்டுள்ளது.டெஸ்ட் அணியின் அங்கமாக உள்ள கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, சாய் சுதர்சன் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆசிய கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. அவர்கள் ஒருமாத காலத்திற்குமேல் ஓய்வில் உள்ளனர்.
டெஸ்ட் கவுரவத்தை நிலைநிறுத்தவும், போட்டியின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்யவும், அனைத்து இந்திய வீரர்களும் அந்தந்த மண்டல அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது கட்டாயமாகும். துலீப் டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் அனைத்து இந்திய வீரர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை மண்டல ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.