கனமழை எச்சரிக்கை காரணமாக 14 மாவட்டங்களில் இன்று, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: நேற்று முன்தினம் (22-11-2025) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (23-11-2025) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (24.11.2025 தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர். தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தென்மாவட்டங்களில் நேற்று இரவு முதலே கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக ராமநாதபுரம், திருவாரூர், புதுகோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், தஞ்சை, மயிலாடுதுறை, சிவகங்கை, கரூர், நாகை, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.