தொடர்ந்து புறக்கணித்ததால் ஓபிஎஸ்சை அடுத்து பாஜ கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி.தினகரன் அறிவிப்பு
காட்டுமன்னார்கோவில்: தொடர்ந்து ஓபிஎஸ்சை அடுத்து பாஜ கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் திடீரென அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக உடைந்தது. எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் என 4 அணிகளாக செயல்பட்டு வந்தன. அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
2017ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா, ஓபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு முயற்சித்து வருகின்றனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த டிடிவி.தினகரன் 2018ம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்ற நோக்கில் அமமுக என்ற கட்சியை தொடங்கினார். பின்னர், பாஜ ஆதரவு நிலைப்பாட்டை டிடிவி.தினகரன் எடுத்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இடம் பெற்றது. அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு சீட் பேரம் நடத்தாமல் 2 சீட்டை மட்டுமே பெற்றார் டி.டி.வி.தினகரன். அதன் பின் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக டி.டி.வி.தினகரன் ேபசி வந்தார். எந்த எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அதே கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்த நேரத்திலும் அதனை வரவேற்றார். இன்னும் ஒரு படி மேல் சென்று சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அதிமுக தான் பெரிய கட்சி அவர்கள் தலைமையில்தான் கூட்டணி என்றாலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷா முடிவு செய்வார் என கூறி வந்தார் டி.டி.வி.தினகரன்.
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறினார். அதனையே பிரதிபலிக்கும் வகையில், கூட்டணி ஆட்சிதான் என பேசினார். இதுகுறித்து எடப்பாடியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘எங்கள் கூட்டணியில் அமமுக இல்லை’ என்று கூறினார். இதற்கு பதிலளித்த டிடிவி.தினகரன், ‘எடப்பாடி அறியாமையில் பேசுகிறார்’ என்று கூறினார். அதே நேரத்தில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ‘டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளார்’ என்று கூறி வந்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பின் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் நேரம் கேட்டிருந்தனர். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. எடப்பாடிக்கு மட்டும் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் கடும் விரக்தியடைந்த ஓபிஎஸ், தனக்கு சுயமரியாதை முக்கியம் என்று கூறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அப்போது பேசிய டி.டி.வி.தினகரன், ‘ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்தது எனக்கு வருத்தம், இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டு இருக்க கூடாது. மீண்டும் ஓபிஎஸ்சை இந்த கூட்டணிக்கு கொண்டு வர பாஜ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
இந்த சூழலில், சமீபத்தில் நடந்த ஜான்பாண்டியனின் பொன்விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் அழைக்கப்படவில்லை. தொடர்ந்து மூப்பனார் நினைவு நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் பங்கேற்ற நிலையில் டிடிவி தினகரனுக்கு அழைப்பு இல்லை. கூட்டணியில் இல்லாத தேமுதிகவுக்கு கூட அழைப்பு இருந்தது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக சமூக வலைதளங்களிலும், ேநரிடையாகவும் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த 1ம் தேதி தென்காசியில் டிடிவி.தினகரன் அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. இந்த தேர்தலில் கூட்டணி குறித்து அமமுக நிலைப்பாட்டை டிசம்பரில் வெளிப்படையாக அறிவிப்போம்’ என்று தெரிவித்தார். இதனால், பாஜ கூட்டணியில் இருந்து அமமுக வெளியேற போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அமமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் நேற்றிரவு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘டெல்லியில் உள்ள அமித்ஷாவின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. துரோகத்தின் மொத்த உருவமான எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களின் எண்ணத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். எங்கு சென்றாலும் தன்னை முதல்வராக கூறிக் கொள்கிறார். அவரது அகங்கார ஆணவப் பேச்சு முறியடிக்கப்பட வேண்டும். நல்ல முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக டிசம்பர் 6ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்ல முடிவு எடுக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேகிறது. ஆனால் டிசம்பர் 6ம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும்’ என்றார்.
அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைந்த 5 மாதத்தில் 2 கட்சிகள் வெளியேறியது
கடந்த ஏப்ரல் 11ம் தேதி அதிமுக-பாஜ இடையே கூட்டணி உருவானதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பேட்டியளித்தார். அதிமுக-பாஜ இடையே கூட்டணி அறிவிக்கப்பட்ட 5 மாதத்தில் அந்த கூட்டணியில் அங்கம் வகித்த ஓபிஎஸ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் வெளியேறினார். அவரை தொடர்ந்து, டிடிவி தினகரன் அக்கூட்டணியில் இருந்து விலகி உள்ளார். இதுவரை புதிய கட்சிகள், அதிமுக-பாஜ கூட்டணியில் இணையவில்லை. பிரமாண்டமான கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு கட்சிகள் விலகியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.