கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாளை துபாயில் பலப்பரீட்சை; பாகிஸ்தான் சவாலை எதிர்கொள்ள தயார்: இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி.20 தொடரில் நாளை இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் போட்டியில் ஏ பிரிவில் இந்தியா-பாகிஸ்தானுடன் மோத உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இரு அணிகளும் முதன்முறையாக மோத உள்ளன. இதனால் இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் ஆடுவதை கண்டித்து உத்தவ்தாக்கரேவின் சிவசேனா கட்சி நாளை `எனது சிந்தூர், எனது நாடு’ என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு சமூக வலைத்தளத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடைசி நேரத்தில் போட்டி ரத்தாகுமா? இந்திய வீரர்கள் கடைசி நேரத்தில் புறக்கணிப்பார்களா என்ற பல கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு தொடரில் பங்கேற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதாகவும், ஐசிசி, ஆசிய கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பாகிஸ்தானுடன் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கோடாக் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறோம். எனவே எங்களுடைய கவனம் எல்லாம் கிரிக்கெட்டில் மட்டும் தான் இருக்கும்.
என்னை பொருத்தவரையில் கிரிக்கெட் விளையாடுவதை தவிர எங்களுடைய மனதில் வேறு எந்த ஒரு விஷயம் இல்லை. நாங்கள் ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடைபெறும் போட்டியில் தான் முழு கவனத்தை செலுத்தி வருகிறோம். ஒரு முறை பிசிசிஐ சொல்லிவிட்டால் அதுபடி தான் நாங்கள் கேட்போம். பிசிசிஐ மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனவே நாங்கள் இங்கு போட்டிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எப்போதுமே சவாலானதாக இருக்கும். எனவே அந்த சவாலை நோக்கி தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோமே, தவிர வேறு எது குறித்தும் நாங்கள் பேசவில்லை, என்றார்.