போதைப் பொருள் பயன்படுத்துவதாக புகார் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் தங்கிய குடியிருப்புகளில் சோதனை: துணை ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி
அந்த மாணவர்கள் அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக தொடர்ந்து போலீசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில், 2 உதவி ஆணையர்கள், 5 ஆய்வாளர்கள், 20 உதவி ஆய்வாளர்கள் உட்பட 100க்கு மேற்பட்ட போலீசார் கூடுவாஞ்சேரி பகுதியில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தங்கி உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகள், வீடுகள், ஓட்டல்கள், கடைகளில் கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் உள்ளதா என திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவலின் பேரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் எதுவும் சிக்கியது என்பது குறித்து சோதனையின் முடிவில் தெரிவிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.