போதை கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்த டிரம்ப் அறிவிப்புக்கு கண்டனம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிக்கை
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா விடுத்துள்ள அறிக்கை: வெனிசுலா நாட்டை தொடர்ந்து, இந்திய அரசையும் போதை கடத்தல் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. இது ஏதோ குரோத மனப்பான்மையும், குறுகிய கண்ணோட்டமும், அரசியல் வன்மமும், அடக்குமுறை ஆதிக்கமும், கொண்டதாகவே தெள்ளத்தெளிவாக படிப்பறிவற்ற பாமரருக்கும் புரியும். இது, இந்திய இறையான்மைக்கு எதிரானது என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பதிவு செய்கிறது.
140 கோடி மக்கள் தொகையை கொண்ட ஆளுமை மிக்க ஜனநாயக அரசினை கொண்டிருப்பதுதான் இந்திய மண்ணின் கலாச்சாரமும், வீரமும் செறிந்த வரலாறு. இதனை தான்தோன்றித்தனமாக எந்த ஆதிக்க சக்தி எதிர்த்தாலும் அதற்கு அகில இந்திய அளவில் உள்ள 7 கோடிக்கு மேற்பட்ட வணிக குடும்பங்களும், வணிக அமைப்புகளில் பணியாற்றுகின்ற 30 கோடிக்கும் மேற்பட்ட பணியாளர் குடும்பங்களும் ஒருங்கிணைந்து எதிர்ப்பதற்கு தயாராக இருக்கிறது.
உண்மையான ஜனநாயகத்திற்கும், மக்கள் அரசுக்கும் எதிரான எவ்வித நடவடிக்கையும் இந்திய தேச நலனுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்திய அரசு எடுக்குமெனில், களம் இறங்கி எதிர்க்க பேரமைப்பு உறுதியாகவும், தயாராகவும் இருக்கிறது. அதோடு இந்திய அரசுக்கு தமிழ்நாடு வணிகர்கள் தோளோடு தோள் நிற்பார்கள்.
அமெரிக்க அதிபர் உடனடியாக இந்தியாவை போதை கடத்தல் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கி, இந்திய மக்களின் இறையான்மைக்கு உரிய நீதியை தாமதம் இன்றி வழங்கி பெருமை சேர்த்திட வேண்டுகோள் விடுப்பதோடு, அதற்கு போராட்டம் தான் முடிவு என்றால், களம் இறங்கி போராடவும் தயாராக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.