போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கு சாட்சியத்தில் முரண்பாடு இருந்ததால் விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: சென்னை மண்ணடி பகுதியில் போதை பொருள் விற்பனை நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, 2018 அக்டோபர் 14ம் தேதி செய்யது அப்துல் காதர் (38) என்பவரிடம் சோதனை நடத்தியதில் அவரிடம் 6 கிராம் மெத்தாம்பெட்டமின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டையார்பேட்டையை சேர்ந்த பாபு (55), வியாசர்பாடியை சேர்ந்த சரவணன் (31) ஆகியோரிடம் தலா 2 கிராம் மெத்தபெட்டமின் இருந்தது. இதையடுத்து, போதை பொருளை பறிமுதல் செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சென்னை 2வது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் எம்.எஸ்.ரமேஷ், என்.கோகிலா ஆஜராகி, பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமின் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை. கைது மற்றும் பறிமுதல் குறித்த சாட்சியம் முரண்பாடாக உள்ளது. தனிப்பட்ட சாட்சியம் எதுவும் விசாரிக்கப்படவில்லை என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடனும், சாட்சிகளுடனும் நிரூபிக்கப்படாதால் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.