மருந்து ஏற்றுமதியில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம், அரசு அதிகாரிகள் வீடுகள் என அமலாக்கத்துறை 7 இடங்களில் அதிரடி சோதனை
* கைதான மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை ம.பி.யில் இருந்து நேரில் அழைத்து வந்து தொழிற்சாலையில் வைத்து விசாரணை
* சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கின
சென்னை: மத்திய பிரதேசத்தில் 22 குழந்தைகள் இறந்த விவகாரத்தை தொடர்ந்து, இருமல் மருந்து ஏற்றுமதி செய்ததில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக ‘சன் பார்மா’ நிறுவனம், அதன் உரிமையாளர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் என 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி வழங்கப்பட்ட மருந்து சாப்பிட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து 22 குழந்தைகள் உயிரிழந்தன.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் ‘ஸ்ரீசன் பார்மா’ என்ற மருந்து நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிப்’ என்ற வகையை சேர்ந்த இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்தது சோதனையின் மூலம் உறுதியானது. 22 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக சித்துவாரா மாவட்டம் பராசியா காவல் நிலைய போலீசார் தரமற்ற மருந்து தயாரித்த ‘சன் பார்மா’ மருந்து நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ரங்கநாதன்(75) மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த வியாழக்கிழமை அம்மாநிலத்தில் இருந்து வந்த தனிப்படையினர் கோடம்பாக்கம் நாகர்ஜூன் நகர் 2வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து ரங்கநாதனை கைது செய்து மத்திய பிரதேசத்திற்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீட்டிற்கு நேற்று 2 வாகனங்களில் வந்த 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழகம் மற்றும் ஒன்றிய அரசு மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் முறையாக முன் அனுமதி வாங்காமல் பல்வேறு மாநிலங்களுக்கு ‘கோல்ட்ரிப்’ மருந்துகள் ஏற்றுமதி செய்ததற்கான ஆவணங்கள், நிறுவனத்தின் வங்கி கணக்கு விபரங்கள் என வழக்கு தொடர்பான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
அதேபோல், நேரில் சோதனை நடத்தாமல், மருந்து நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவான்மியூர் பாலகிருஷ்ணன் சாலையில் உள்ள தமிழக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் தீபா ஜோசப் வீடு, அண்ணாநகரில் வசித்து வரும் தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவன வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகள் மீதும் லஞ்சம் பெற்றதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்கவார்சத்திரத்தில் உள்ள ‘ஸ்ரீசன் பார்மா’ மருந்து நிறுவன தொழிற்சாலையில் சோதனை நடத்த நேற்று காலை அமலாக்கத்துதுறை அதிகாரிகள் காரில் வந்தனர். மருந்து நிறுவனத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் தொடர்பாக காஞ்சிபுரம் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கும் சோதனை தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வரும் வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நிறுவனத்தின் வாசலிலேயே காத்திருந்தனர். பின்னர் ஒரு வழியாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘ஸ்ரீசன் பார்மா’ தொழிற்சாலைக்கு வந்தனர். அதன் பிறகு அவர்கள் முன்னிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் இடையே கடந்த வியாழக்கிழமை கைது செய்து மத்தியபிரதேசத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை அம்மாநில போலீசார் நேற்று மருந்து தயாரித்த தொழிற்சாலைக்கு நேரில் அழைத்து வந்தனர். அப்போது ரங்கநாதனிடம் மருந்து உற்பத்தி மற்றும் எத்தனை மாநிலத்திற்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏற்றுமதியில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? ஏற்றுமதி மருந்துகளை நேரடியாக மருந்து நிறுவனம் மூலம் அனுப்பட்டதா அல்லது ஏஜெண்டுகள் மூலம் அனுப்பட்டதா உள்ளிட்ட கேள்விகள் நேரடியாக கேட்கப்பட்டது. அதற்கு உரிமையாளர் ரங்கநாதன் அளித்த பதிலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்தியபிரதேச மாநில தனிப்படையினர் பதிவு செய்து கொண்டனர்.
அப்போது ரங்கநாதன் வீட்டில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை உடனுக்குடன் மின்னஞ்சல் மூலம் சுங்கவார்சத்திரத்தில் உள்ள மருந்து நிறுவனத்திற்கு அனுப்பட்டது. அந்த ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரடியாக ரங்நாதனிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. மருந்து ஏற்றுமதி தொடர்பாக மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீடு, அலுவலகம், அரசு அதிகாரிகள் வீடுகள், தொழிற்சாலை என மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் தான் ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம் சட்டவிரோத மருந்து ஏற்றுமதியில் எத்தனை கோடி மூறைகேடு செய்துள்ளனர் என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.