போதைப்பொருள் வேட்டை எனக்கூறி வெனிசுலா நாட்டை சுற்றிவளைக்கும் அமெரிக்கா: கரீபியன் கடலில் போர்க்கப்பல் குவிப்பு
வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதாகக் கூறி, வெனிசுலா அருகே அமெரிக்கா தனது படைகளைக் குவித்து வருவது, இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஆட்சிக்கு வந்தது முதலே, அந்நாட்டுடன் அமெரிக்கா தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. வெனிசுலா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளித்து வருகிறது. மேலும் அதிபரின் ஆட்சியை கவிழ்க்கும் சதி வேலைகள் நடப்பதாக பரபரப்பு புகாரும் கூறப்பட்டு வருகிறது. மேலும், வெனிசுலாவில் ராணுவத் தலையீடு நடத்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பே சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன் வெனிசுலாவில் ரகசியமாக, தேவைப்பட்டால் உயிர்ப்பலி ஏற்படுத்தும் வகையிலான சிஐஏ-யின் நடவடிக்கைகளுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்ததாக வெளியான தகவல்கள் மேலும் பதற்றத்தை அதிகரித்தன. இந்நிலையில், அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜெரால்டு ஃபோர்டு’-ஐ, அதன் தாக்குதல் குழுவுடன் கரீபியன் கடலுக்குச் செல்லுமாறு அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நேற்று உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கரீபியன் கடலில் படைகளைக் குவித்து வரும் அமெரிக்கா, தற்போது மேலும் எட்டு போர்க்கப்பல்கள், ஒரு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் எஃப்-35 ரக போர் விமானங்களையும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்க்கும் சர்வதேச குற்ற அமைப்புகளை முறியடிப்பதே எங்களது நோக்கம்’ என்று விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இந்த ராணுவக் குவிப்பு, வெறும் போதைப்பொருள் வேட்டைக்கு அவசியமானதா என ராணுவ ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே, அமெரிக்காவின் தீவிரமான ராணுவ நடவடிக்கைகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க தெற்குப் படைப்பிரிவின் தளபதி அட்மிரல் ஆல்வின் ஹோல்சி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்குப் பதிலடியாக, வெனிசுலா அதிபர் மதுரோ, தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ‘ஆயுதப் போராட்டத்தில்’ ஈடுபடுவோம் என எச்சரித்து, தனது ராணுவப் படைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளார். இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.