போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகப்போட்டி
*16 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்பு
காரைக்கால் : காரைக்காலில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நாடகம் போட்டி நடைபெற்றது.காரைக்கால் மாவட்டம் கல்வித்துறையில் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் சமுதாய நலப்பணித் திட்ட தன்னார்வலர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நாடகப் போட்டி காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சமுதாய நலப்பணி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் செய்திருந்ததோடு, நோக்க உரை ஆற்றி வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார். மேல்நிலை கல்வி துணை இயக்குனர் ஜெயா சிறப்புரையாற்றினார். சமகிரக சிக்ஷா திட்ட ஒருங்கிணைப்பாளர் வனிதா வாழ்த்துரை வழங்கினார்.
இப்போட்டியில் 16 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பள்ளிக்கும் ஐந்து மணி துளிகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் மிகச் சிறப்பாக தனது நடிப்புத் திறனையும் கருத்துகளையும் தெளிவாக நாடகத்தின் வாயிலாக எடுத்துரைத்து மற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
முதல் பரிசை காரைக்கால் மேடு அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றது. இரண்டாம் பரிசினை தருமபுரம் எஸ்.ஆர்.வி.எஸ் நேஷனல் மேல்நிலைப்பள்ளியும், மூன்றாம் பரிசினை திருப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியும், ஆறுதல் பரிசினை சேத்தூர் மேயர் சவுந்தரராஜன் அரசு உயர்நிலைப் பள்ளியும் பெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், சமுதாய நலப்பணித்திட்ட திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.