போதைப்பொருள் விவகாரம்.. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜர்!!
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜரானார். போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் கடந்த ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் சிறையில் இருந்து வந்த நிலையில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் உள்ள இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீகாந்த் வரும் 28 ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29ம் தேதியும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று ஆஜராக வேண்டிய நடிகர் ஸ்ரீகாந்த், குடும்ப சூழ்நிலை காரணமாக ஆஜராக முடியவில்லை என கூறிய அவர், மற்றொரு நாள் ஆஜராவதாக தெரிவித்து இருந்தார். மேலும், நடிகர் கிருஷ்ணா இன்று ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகர் கிருஷ்ணாவிடம், போதை பொருள் தொடர்பாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது இன்று மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.