வறட்சி, கடும் வெயிலால் விளைச்சல் பாதிப்பு; மாம்பழம் வரத்து 30 டன்னாக சரிவு: கடந்த ஆண்டை விட கிலோவுக்கு ரூ.60 விலை உயர்வு
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் மா மரங்களில் பூ பூக்கும். இவைகள் நன்கு வளர்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் மாங்காய் விளைச்சல் தரும். கடந்தாண்டு 2 பருவமழையும் சரிவர பெய்யாததால் மாமரங்களில் பூக்கள் பூப்பது குறைந்தது. அதேவேளையில் கடும் வெயில், வறட்சி காரணமாக பூக்கள் உதிர்ந்தது. இதன் காரணமாக நடப்பாண்டு எதிர்பார்த்த அளவில் மாங்காய் விளைச்சல் இல்லாமல் போனது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் மாம்பழம் வரத்து உச்சத்தில் இருந்தது. நடப்பாண்டு 70 சதவீதம் வரத்து சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சேலம் மாம்பழ வியாபாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா மரங்கள் உள்ளன. சீசன் போது 100 முதல் 120 டன் மாங்காய் விளைச்சல் கிடைக்கும். போதிய மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டு விளைச்சல் பாதித்துள்ளது.
வழக்கமாக ஏப்ரல் 15க்கு மேல் சீசன் களை கட்டும். நடப்பாண்டு மே 1ம் தேதிக்கு மேல் சீசன் தொடங்கியது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் சேலம் மார்க்கெட்டுக்கு மாங்காய் வரத்து 100 டன்னாக இருந்தது. நடப்பாண்டு வெறும் 30 டன் மட்டுமே வருகிறது. சேலம் மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட மாங்காய் மொத்த வியாபாரிகள் உள்ளனர். இங்கு விற்பனைக்கு வரும் மாங்காயை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ மாம்பழம் ரகத்தை பொருத்து ₹180 முதல் ₹240 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட தற்போது கிலோவுக்கு ₹60 விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
பார்சல் அனுப்புவது குறைந்தது
சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் மாம்பழம் 75 சதவீதம் உள்ளூர் விற்பனைக்கும் மீதமுள்ள 25 சதவீதம் துபாய், மலேசியா, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படும். நடப்பாண்டு உள்ளூர் தேவைக்கு போதுமானதாக உள்ளதால் மாம்பழத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு மற்றும் வட மாநிலங்களுக்கு பார்சல் அனுப்புவது குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.